shikhar dhawan
shikhar dhawan Twitter
கிரிக்கெட்

“இவர் மட்டும் இருந்திருந்தால் 2019 உலகக்கோப்பையே வென்றிருக்கலாம்” - தவான் இல்லாத ஒருநாள் அணி சரியா?

Rishan Vengai

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 05ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை அணித்தேர்வாளர் அஜித் அகர்கர் இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.

இந்திய அணியின் இந்த அறிவிப்பில் சமீபமாக பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடிய வீரர்களுக்கு பதிலாக, பல மாதங்களாக ஓய்வில் இருந்த வீரர்கள் இடம்பெற்றிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், ஷிகர் தவான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் உலக்கோப்பை 15 வீரர்கள் :

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஐசிசி தொடர்களில் அதிக ரன்கள் ; தொடர் நாயகன் விருது வென்ற ஷிகர் தவான்

இந்திய அணியின் மூத்த வீரராக இருந்து வரும் ஷிகர் தவான் 171 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடி 17 சதங்கள் மற்றும் 40 அரை சதங்கள் உட்பட 6896 ரன்கள் குவித்துள்ளார். மாடர்ன் டே கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் ஒன் அணியாக மாற்றியதில் ஷிகர் தவானின் பங்கும் இருக்கிறது. அந்தளவு ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக மறக்கமுடியாத பல வெற்றிகளை அமைத்து கொடுத்துள்ளனர். அதும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் ஷிகர் தவானின் ஆட்டம் மிகவும் அற்புதமாகவே இருந்துள்ளது.

shikhar dhawan

2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 412 ரன்களை குவித்த அவர், காலிறுதிப்போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்து (137 ரன்கள்) அசத்தியிருந்தார். 2019 உலகக்கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அழுத்தமான போட்டியில் 117 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த போட்டியில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

shikhar dhawan

*சாம்பியன்ஸ் டிராபி 2013 ( 2 சதங்கள், 363 ரன்கள்),

*ஆசிய கோப்பை 2018 ( 2 சதங்கள், 342 ரன்கள்),

*யு-19 உலகக்கோப்பை 2004 ( 3 சதங்கள், 505 ரன்கள்) தொடர்களில் தொடர் நாயகன் விருதும்,

*ஆசியக்கோப்பை 2014 (192 ரன்கள்),

*ஒருநாள் உலகக்கோப்பை 2015 ( 2 சதங்கள், 412 ரன்கள்)

*மற்றும் சாம்பியன்ஸ் டிராபி 2017 ( 1 சதம், 338 ரன்கள்)"

என ஷிகர் தவான் முக்கியமான தொடர்களில் இந்திய அணிக்காக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷிகர் தவான் இருந்திருந்தால் 2019 உலகக்கோப்பை வென்றிருக்கலாம் - ரவி சாஸ்திரி

கடந்த மாதம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருந்த முன்னாள் தலைமை பயிற்சியாலர் ரவி சாஸ்திரி 2019 உலகக்கோப்பை குறித்து பேசியிருந்தார். அப்போது ஷிகர் தவான் குறித்து பேசுகையில், “2019 உலகக்கோப்பையை பொறுத்தவரையில் நாங்கள் சிறந்த அணியை கொண்டிருந்தோம். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டி தோல்வியின் போது எங்களிடம் முக்கியமான ஒரு வீரர் இல்லாமல் இருந்தார். அது ஷிகர் தவான். மக்கள் ரோகித் சர்மா மற்றும் கோலியை போல் தவானுக்கான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

அவர் ஒரு மிகச்சிறந்த வீரர், அரையிறுதிப்போட்டியில் அவர் இல்லாமல் போனதால் தான் ஸ்விங்கிங் கண்டிசனில் 3 வலது கை வீரர்களின் விக்கெட்டை நாங்கள் சுலபமாக இழக்க நேரிட்டது. தற்போதைய உலகக்கோப்பைக்கு இந்திய அணி இரண்டு அல்லது 3 இடது கை வீரர்களை அணிக்குள் எடுத்துச்செல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஷிகர் தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒருநாள் உலகக்கோப்பையிலும் இடம்பெறாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலிக்காக உலகக்கோப்பை வெல்ல வேண்டும், ரோகித்திற்காக வெல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் 37 வயது மற்றொரு ஹீரோவான ஷிகர் தவானை ரசிகர்கள் மறந்துவிட்டனர்.

உண்மையில் ஷிகர் தவனின் திறமைக்கான அங்கீகாரம் மக்களிடையே கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது தான்.