டை2025 ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 அன்று நடைபெற இருக்கிறது.
இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் யுஏஇ அணியை எதிர்கொண்டு விளையாடியது. நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 3 ஸ்பின்னர்கள் மற்றும் ஒரே ஒரு ஃபாஸ்ட் பவுலருடன் களமிறங்கியது.
யுஏஇ-க்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், ஷிவம் துபே, பும்ரா, அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி அனைவரும் விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
ஆனால் இந்திய அணியில் ஒரே ஒரு ஃபாஸ்ட் பவுலராக பும்ரா மட்டுமே இடம்பெற்றிருந்தார். இந்திய அணியின் இந்த முடிவு சரியானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே இந்திய அணியில் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அதனால்தான் ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். ஆனால் டி20 உலக கோப்பை பொறுத்தவரையில் இந்தியாவில் இரவில் போட்டி நடைபெற உள்ளதால், இந்திய அணியில் பும்ரா உடன் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இல்லையென்றால் அது இந்தியாவிற்கு பாதகமாகவே அமையும்” என தெரிவித்துள்ளார்.