2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஐபிஎல் அணிகளின் வீரர்கள் சிலர் காயம் காரணமாக விலகியிருப்பது, ஆரம்பத்திலேயே அணிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட 9 அணி வீரர்கள் விலகியிருப்பது, தொடக்கப் போட்டிகளில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், 10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில், இத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஐபிஎல் அணிகளின் வீரர்கள் சிலர் காயம் காரணமாக விலகியிருப்பது, ஆரம்பத்திலேயே அணிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம், இருக்கும் 10 அணிகளில் 9 முக்கியமான வீரர்கள் விலகியுள்ளனர். விலகிய வீரர்கள் யார்? அவர்களுக்கு என்ன காயம்? தொடர்ந்து அவர்கள் இத்தொடரில் விளையாடுவார்களா என்பது குறித்து இங்கு பார்ப்போம். முதலில், நம்ம ’தல’ டோனி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நாதன் எல்லிஸ் விலகியுள்ளார். அவருக்கு தொடையில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து இரண்டு வீரர்கள் விலகியுள்ளனர்.
ஒருவர் இந்திய வேகப்பந்து வீச்சாளாரான ஹர்சித் ராணா. இன்னொருவர் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா. இதில் ஹர்சித் ராணா, சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியின் பயிற்சிப் போட்டியின்போதே காயம் அடைந்ததார். இதனால், அவர் இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. மற்றொரு வீரரான பதிரானா, காயம் காரணமாக விலகியுள்ளார். அதேநேரத்தில், இவர் தொடரின் ஏதேனும் ஒருகட்டத்தில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்தும் ஒரு வீரர் விலகியுள்ளார். கடந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வென்ற பயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்த ஆஸ்திரேலிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட். இவர், கடந்த நான்கு மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். எனினும், இவர் தொடக்கப் போட்டிகளைத் தவறவிடும் நிலையில், பிந்தைய போட்டிகளில் அணியுடன் சேருவார் என நம்புகின்றனர். அடுத்து சென்னை அணியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடம்பெயர்ந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியால் 3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட புதிய வீரரான ஜாக் எட்வர்ட்ஸ், கால் காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விலகியுள்ளார். மேலும் இதே அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையின்போது காயம் காரணமாக விலகிய அவர், தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இதனால், அவர் ஆரம்பப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. அவர் இல்லாத நிலையில், இஷான் கிஷன் அணியை வழிநடத்த உள்ளார். இவர்களைத் தவிர, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க், சர்வதேசப் போட்டிகள் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்கப் போட்டிகளைத் தவறவிடுவார் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே முக்கியமான வீரர்கள் விலகியிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.