சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் முதல் சீசன், இன்று (பிப்ரவரி 22) தொடங்க இருக்கிறது. முன்னதாக, இந்தத் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தொடரின் முதல் போட்டி இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்மூலம் ஓய்வுபெற்ற சீனியர் வீரர்களின் ஆட்டங்களைக் காண முடியும். இத்தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. மார்ச் 16 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்தும் டி20 வடிவில் நடைபெற உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு குமார சங்ககரா, மேற்கிந்திய தீவு அணிக்கு பிரையன் லாரா, இங்கிலாந்து அணிக்கு இயான் மார்கன், தென்னாப்பிரிக்க அணிக்கு ஜாண்டி ரோட்ஸ், ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடரில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் மோதும் முதல் போட்டி, நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. பின்னர் இங்கிலாந்து அணியையும் (பிப்.25), தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியை (மார்ச் 1) எதிர்த்து விளையாடுகிறது. பின் ஆஸ்திரேலியா (மார்ச் 5) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 8) ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இத்தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர், “கிரிக்கெட் களத்துக்கு மீண்டும் திரும்புவது ஒரு விளையாட்டு வீரராக எனக்கு அளித்த அடையாளத்தை மீண்டும் பெறுவதாக இருக்கிறது. எனது முன்னாள் அணி வீரர்கள் மற்றும் சகாக்களுடன் விளையாடுவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில், சச்சின் டெண்டுல்கருடன் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, யூசுப் பதான், இர்பான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, தவால் குல்கர்னி, வினய் குமார், ஷபாஸ் நதீம், ராகுல் சர்மா, நமன் ஓஜா, பவன் நெகி, குர்கீரத் சிங் மான், அபிமன்யூ மிதுன் களமிறங்க இருக்கிறார்கள்.