Rahul | Virat Kohli
Rahul | Virat Kohli Kunal Patil
கிரிக்கெட்

INDvNZ |ஐந்தாவது வெற்றி யாருக்கு..?

Viyan
போட்டி 21: இந்தியா vs நியூசிலாந்து
மைதானம்: ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், தரம்சாலா
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 22, மதியம் 2 மணி

2023 உலலக் கோப்பையில் இதுவரை

இந்தியா
போட்டிகள் - 4, வெற்றிகள் - 4, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 8
புள்ளிப் பட்டியலில் இடம்: இரண்டாவது
சிறந்த பேட்ஸ்மேன்: ரோஹித் ஷர்மா - 265 ரன்கள்
சிறந்த பௌலர்: ஜஸ்ப்ரித் பும்ரா - 10 விக்கெட்டுகள்
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் என எதிர்த்து விளையாடிய 4 அணிகளுக்கு எதிராகவும் எளிதான வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது இந்திய அணி. 4 போட்டிகளிலுமே இந்திய அணி சேஸிங்கே செய்திருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

Rohit Sharma |

நியூசிலாந்து
போட்டிகள் - 4, வெற்றிகள் - 4, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 8
புள்ளிப் பட்டியலில் இடம்: முதலாவது
சிறந்த பேட்ஸ்மேன்: டெவன் கான்வே - 249 ரன்கள்
சிறந்த பௌலர்: மிட்செல் சான்ட்னர் - 11 விக்கெட்டுகள்
யாரும் எதிர்பாராத விதமாக இந்த உலகக் கோப்பையைத் தொடங்கியிருக்கிறது நியூசிலாந்து. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை சாய்த்தவர்கள், நெதர்லாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை எளிதாக வென்றிருக்கின்றனர். 2 வெற்றிகள் முதலில் பேட்டிங் செய்தபோதும், 2 வெற்றிகள் சேஸிங் செய்தபோதும் வந்திருக்கின்றன.

ஹர்திக் இடத்தை நிரப்பபோவது யார்?

Ishan Kishan

இந்திய அணிக்கு ஐசிசி தொடரில் நியூசிலாந்தைக் கண்டாலே ஆவதில்லை. கடைசியாக 2003 உலகக் கோப்பையில் அவர்களை வீழ்த்தியது தான். ஆனால் அதன்பிறகு ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மட்களிலும் ஐசிசி தொடர்களில் அந்த அணியிடம் தோல்வியே கண்டிருக்கிறது. இம்முறையேனும் இந்திய அணி அதை மாற்ற முயற்சிக்கும். ஆனால் இந்த முக்கியமான போட்டிக்கு முன் ரோஹித் அண்ட் கோ ஒரு பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அணியோடு தரம்சாலா பயணிக்கவில்லை. அவர் இடத்தை நிரப்ப இன்னொரு ஆல்ரவுண்டர் இல்லாததால், எந்த காம்பினேஷனோடு இந்திய அணி செல்லப்போகிறது என்பதைப் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஹர்திக்கின் இடத்தை நிரப்பவேண்டுமெனில் இந்தியா 2 மாற்றங்கள் செய்யவேண்டும். எப்படியும் ஹர்திக் இடத்தில் இஷன் கிஷனோ, சூர்யகுமார் யாதவோ களமிறக்கப்படலாம். பௌலிங்கை வலுசேர்க்க ஷர்துல் தாக்கூருக்குப் பதில் முகமது ஷமி களமிறக்கப்படலாம். இருந்தாலும் இந்திய அணி 5 பௌலிங் ஆப்ஷன்களோடு விளையாடவேண்டியிருக்கும். அது கொஞ்சம் ரிஸ்க் தான்.

நியூசிலாந்துக்கும் இது சவாலாகவே இருக்கும்

நியூசிலாந்து அணி இந்தியாவைப் போல் 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவை விட முன்னால் இருக்கிறது. இருந்தாலும், ஒரு வகையில் பார்த்தால் நியூசிலாந்தை விட இந்தியா நல்ல நிலையில் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் அவர்களின் கடைசி 3 வெற்றிகள் ஆப்கானிஸ்தன, நெர்தர்லாந்து, வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக வந்தவை. அவை நிச்சயம் கிடைக்கவேண்டிய வெற்றிகளே. அடுத்த வரப்போகும் 5 போட்டிகளில் அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை சந்திக்கவேண்டியிருக்கிறது. எப்படி இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி தொடர் வெற்றிகளுக்குத் தொடக்கமாக இருந்ததோ, அதுபோல் இந்தியாவுக்கு எதிரான தோல்வி வீழ்ச்சியின் தொடக்கமாகவும் அமையலாம். கடினமான போட்டிகள் அடுத்து வரவிருக்கும் நிலையில், நியூசிலாந்து இந்தப் போட்டியில் நிச்சயம் கடுமையாகப் போராடியாகவேண்டும். அதுவும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளையே பந்தாடி வரும் இந்திய அணியை கேப்டன் வில்லியம்சன் இல்லாமல் சந்திப்பது அவர்களுக்கு எளிதான விஷயமாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும், ஓரளவு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் தரம்சாலா ஆடுகளத்தில் அவர்கள் இந்தியாவை சந்திப்பது அவர்களுக்கு ஓரளவு சாதகமான அம்சம்.

மைதானம் எப்படி இருக்கும்

தரம்சாலா மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக ஸ்விங் பௌலர்களுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும். போல்ட்டைப் பயன்படுத்த நினைக்கும் நியூசிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம். அதேபோல் ஷமியைக் களமிறக்கினால் இந்தியாவும் அப்படியே யோசிக்கும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 4 சேஸிங்கை அரங்கேற்றியிருக்கும் இந்தியா தரம்சாலாவிலும் அதையே செய்ய விரும்பும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

இந்தியா - கே எல் ராகுல்: நியூசிலாந்து ஸ்பின்னர் சான்ட்னர் விக்கெட்டுகளை அள்ளிக்கொண்டிருக்கும் நிலையில், அவரை சமாளிக்கும் பொறுப்பு ராகுலுக்கு உள்ளது. தனக்குப் பின் ஹர்திக் இல்லை எனும்போது, அவர் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்பதை அவர் உணர்ந்து விளையாடுவார். அது நெருக்கடியாகவும் கூட அமையலாம்!

நியூசிலாந்து - டிரென்ட் போல்ட்: இந்தியாவுக்கு எதிராக ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்ற காரணம் போதுமே!