Mohammed Shami
Mohammed Shami  Manvender Vashist Lav
கிரிக்கெட்

முதல் பந்திலேயே விக்கெட், முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன். தரம்சாலாவில் பட்டையைக் கிளப்பிய ஷமி!

Viyan
போட்டி 21: இந்தியா vs நியூசிலாந்து
முடிவு: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி (நியூசிலாந்து - 273 ஆல் அவுட்; இந்தியா - 274/6, 48 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: முகமது ஷமி
பௌலிங்: 10-0-54-5

புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களில் இருந்த இவ்விரு அணிகளும் மோதிய போட்டியின் கடைசி நிமிடங்களில் ஒரேயொரு பெயர் தான் ஒட்டுமொத்தமாக தேசம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது: விராட் கோலி. இந்திய அணி சேஸிங்கில் சற்று தடுமாறியபோது வழக்கம்போல் தனி ஆளாக நின்று இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அருகில் அழைத்துச் சென்றார் சேஸிங் கிங் விராட் கோலி! சச்சினின் 49வது சதத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட அவர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் ஒரு மிகப் பெரிய அரங்கில், மிக முக்கிய தருணத்தில், ஃபார்மில் இருக்கும் ஒரு அணிக்கு எதிராக அவர் ஆடியிருக்கும் ஆட்டம் உலகத்தரம் வாய்ந்தது. ஆனால், அவர் ஆட்ட நாயகன் விருது வாங்கவில்லை. அப்படியெனில் அவ்விருதை வாங்கியவர் எப்படியான தாக்கம் ஏற்படுத்தியிருக்கவேண்டும்! முகமது ஷமி சாதாரண பெர்ஃபாமன்ஸை வெளிக்காட்டிடவில்லை.

Mohammed Shami

முகமது ஷமி நிச்சயம் எந்த அணியின் பிளேயிங் லெவனிலும் ஆடக் கூடியவர். நியாயப்படி இந்தியாவின் சிறந்த லெவனில் அவரும் இருப்பார். ஆனால் அணிக்குத் தேவையான காம்பினேஷன் அவரை பெஞ்சில் அமரவைத்திருக்கிறது. முதல் 4 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் விக்கெட்டுகளாக அள்ளிக் குவித்த அஹமதாபாத் மைதானத்தில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைய, அதன் விளைவாக ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த முதல் வாய்ப்பையே மிகச் சிறப்பாகப் பிடித்துக்கொண்டார் அவர்.

இந்தப் போட்டியில் ஒன்பதாவது ஓவரில் முதல் முறையாக பந்துவீச வந்தார் ஷமி. முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி தன் வருகையை உலகுக்கு அறிவித்தார் அவர். தன் வழக்கமான பாணியில் தன் சிறப்பான சீம் மூவ்மென்ட் மூலம் பந்தை அவர் மாயம் செய்ய வைக்க, ஸ்டம்புகளைத் தகர்த்தது அந்தப் பந்து. இந்த உலகக் கோப்பையில் அவர் வீசிய முதல் பந்திலேயே வில் யங்கை பெவலியனுக்கு அனுப்பினார் ஷமி. தன் முதல் ஸ்பெல்லில் 4 ஓவர்கள் வீசிய ஷமி 23 ரன்கள் கொடுத்தார். அதன்பிறகு 16 ஓவர்கள் கழித்துத்தான் பந்துவீச வந்தார் அவர்.

Mohammed Shami

மிகச் சிறப்பாக சென்றுகொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் பார்ட்னர்ஷிப்பை தன் இரண்டாவது ஸ்பெல்லின் இரண்டாவது ஓவரிலேயே உடைத்தார் ஷமி. 75 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திரா, ஷமி வீசிய ஸ்லோ ஆஃப் கட்டரில் வீழ்ந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு அந்த பார்ட்னர்ஷிப் 152 பந்துகளில் 159 ரன்கள் விளாசியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தை இந்தியாவின் பக்கமிருந்து எடுத்துச் சென்றிருந்தது அந்தக் கூட்டணி. குல்தீப் போன்ற ஒரு சவாலான பௌலரை எவ்வித தயக்கமுமின்றி பொளந்து கட்டியிருந்தனர் அவர்கள் இருவரும். அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து மீண்டும் இந்தியாவை போட்டிக்குள் கொண்டுவந்தார் ஷமி. இரண்டாவது ஸ்பெல்லும் நான்கு ஓவர் கொண்டதாக அமைந்தது. அதில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் ஷமி. அந்த விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்லாமல், நியூசிலாந்தின் ரன் ரேட்டும் ஓரளவு குறைவதற்கு மிகமுக்கியக் காரணமாக இருந்தார்.

மூன்றாவது ஸ்பெல் இன்னும் மிரட்டலாக இருந்தது. அந்த கடைசி இரு ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் அவர். அசத்தல் ஃபார்மில் இருக்கும் மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றிய அவர், கடைசி ஓவரில் 130 ரன்கள் விளாசியிருந்த டேரில் மிட்செலின் விக்கெட்டையும் கைப்பற்றினார். 5 விக்கெட்டுகள்! 4 போட்டிகள் வெளியே அமர்ந்துவிட்டு, உள்ளே வந்த முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அவர். 47.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 270 ரன்கள் என்றிருந்த நியூசிலாந்து அணி நிச்சயம் 285-290 எடுக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அந்த இன்னிங்ஸ் வெறும் 273 ரன்களுக்கே முடிந்தது. காரணம் ஷமி வீழ்த்திய விக்கெட்டுகள். இப்படி தன்னுடைய ஒவ்வொரு ஸ்பெல்லிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார் ஷமி. அதன் காரணமாக கோலியைப் பின்னுக்குத்தள்ளி ஆட்ட நாயகன் விருது வென்றுவிட்டார்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு நீங்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுகிறீர்கள் என்றால் விரைவிலேயே அந்த நம்பிக்கையைப் பெறுவது அவசியம். இந்த முதல் போட்டி நான் அந்த நம்பிக்கையை பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. உங்கள் அணி சிறப்பாக விளையாடியிருக்கொண்டிருக்கும்போது பெஞ்சில் அமர்ந்திருப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. அவர்கள் உங்களின் டீம் மேட்கள். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கவேண்டும். நான் வெளியே அமரவேண்டும் என்பது அணியின் நலனுக்கானது என்றால் அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன். நான் எடுத்து விக்கெட்டுகள் மிகவும் முக்கியம். ஏனெனில், இந்த உலகக் கோப்பையின் சிறந்த இரு அணிகள் மோதும் போட்டியில் ஆரம்பத்திலேயே தாக்கம் ஏற்படுத்திடவேண்டும்"
முகமது ஷமி