Virat Kohli
Virat Kohli Manvender Vashist Lav
கிரிக்கெட்

INDvENG | ஆறாவது வெற்றியைப் பதிவு செய்யுமா இந்தியா? இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா போட்டி..!

Viyan
போட்டி 29: இந்தியா vs இங்கிலாந்து
மைதானம்: ஏகானா ஸ்டேடியம், லக்னோ
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 29, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

Rahul Dravid | Rohit Sharma | Ravichandran Ashwin

இந்தியா
போட்டிகள் - 5, வெற்றிகள் - 5, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 10
புள்ளிப் பட்டியலில் இடம்: இரண்டாவது
சிறந்த பேட்ஸ்மேன்: விராட் கோலி - 354 ரன்கள்
சிறந்த பௌலர்: ஜஸ்ப்ரித் பும்ரா - 11 விக்கெட்டுகள்
இந்த உலகக் கோப்பையில் இதுவரை தோற்காத ஒரே அணி இந்தியா தான். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வென்றிருக்கிறது ரோஹித் அண்ட் கோ. ஒரு போட்டியில் அதிகம் ஆடியிருக்கும் தென்னாப்பிரிக்க அணி நல்ல ரன்ரேட் வைத்திருப்பதால் தான் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஐந்து போட்டிகளிலுமே சேஸ் செய்து மிகவும் எளிதாக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.

இங்கிலாந்து
போட்டிகள் - 5, வெற்றி - 1, தோல்விகள் - 4, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
புள்ளிப் பட்டியலில் இடம்: ஒன்பதாவது
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் மலான் - 220 ரன்கள்
சிறந்த பௌலர்: ரீஸ் டாப்லி - 8 விக்கெட்டுகள்
வங்கதேசத்தை வீழ்த்திய இங்கிலாந்து அணியால், வேறு எந்த அணியையுமே இந்த உலகக் கோப்பையில் தோற்கடிக்க முடியவில்லை. பேட்டிங், பௌலிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பிக்கொண்டிருக்கும் நடப்பு சாம்பியன் இந்தப் போட்டியில் தோற்றால் அரையிறுதி வாய்ப்பை இழக்கும்.

மைதானம் எப்படி இருக்கும்?

ஏகானா மைதானத்தில் இந்த உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகள் நடந்திருக்கின்றன. இரண்டிலுமே இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் சொல்லி வைத்தாற்போல் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஐபிஎல் தொடருக்குப் பிறகு மாற்றி அமைக்கப்பட்ட ஆடுகளங்கள் ஓரளவு நன்றாகவே இருக்கின்றன. இன்னிங்ஸ் தொடக்கத்தில் கொஞ்சம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்றனர். பின்னர் பேட்டிங்குக்கு ஏதுவாக இருக்கின்றன. சுழற்பந்துவீச்சாளர்கள் தங்கள் அணியின் டாப் விக்கெட் டேக்கராக விளங்கியிருக்கிறார்கள். இப்படி அனைத்து தரப்புக்குமே ஏற்ற ஆடுகளமாக இருந்திருக்கிறது. இந்தப் போட்டியிலும் டாஸ் வெல்லும் அணி சேஸ் செய்யவே நினைக்கும்.

ஆறாவது வெற்றியை டார்கெட் செய்யும் இந்தியா

தடுக்க முடியாத அணியாக விளங்கி வரும் இந்தியா, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பின்னடைவை சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்த அணி உளவியல் ரீதியாக நல்ல நிலையில் போட்டியைத் தொடங்கும். காயத்தால் அவதிப்படுவரும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. ஆனால் அது இந்திய அணியை கடந்த போட்டியில் பாதிக்கவில்லை. உள்ளே வந்த ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். பேட்டிங் இன்னும் அசத்தலாக சென்றுகொண்டிருக்கிறது. என்ன, 5 போட்டிகளிலும் சேஸிங் செய்திருக்கும் இந்திய அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால் அனைத்து துறைகளிலும் கொஞ்சம் சவால்களை சந்திக்கலாம். ஏனெனில், இந்தியாவின் பேட்டிங் டெப்த் சோதனைக்கு உட்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல், இலக்கு தெரியாத நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் நிச்சயம் வேறு மாதிரி ஆட்டத்தை அணுக வேண்டியிருக்கும். அதுபோக, இரண்டாவது பௌலிங் செய்கையில் 5 பௌலர்களுடன் மட்டும் போவது கொஞ்சம் சிக்கலாக இருக்கலாம். இருந்தாலும், இதுபோன்ற சவால்களை இந்திய அணி சந்திக்க இதுதான் சரியான நேரமும் கூட. இதேபோல் ஆதிக்கம் செலுத்து லீக் ஸ்டேஜை முடித்துவிட்டு, இந்த சவால்கள் நாக் அவுட்டில் வந்தால் அது பெரும் பிரச்சனையாக இருக்கும். அதனால் இந்தியா இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சவால்களை சந்திப்பது நல்லது.

அரையிறுதி வாய்ப்பில் நீடிக்குமா இங்கிலாந்து?

England Players

இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியைத் தோற்றால், இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழக்கக்கூடும். இதுவரை 2 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் இந்தியா, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் குறைந்தபட்சம் 10 புள்ளிகளாவது பதிவு செய்ய முடியும். அதனால் இந்தப் போட்டியில் அவர்களுக்கு வெற்றி அவசியம். ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் போன்ற வீரர்கள் தங்களின் சிறப்பான இன்னிங்ஸை கொடுக்கவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். ஜாஸ் பட்லரும் இந்தத் தொடரில் இதுவரை வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். 2019 உலகக் கோப்பையின் நாயகர்கள் காலை வாராமல் லக்னோவில் எழுச்சி பெற்றே ஆகவேண்டும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

இந்தியா - விராட் கோலி: மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் விராட், இந்தப் போட்டியில் சச்சினின் சாதனையை சமன் செய்யலாம்.

இங்கிலாந்து - மார்க் வுட்: 2023 ஐபிஎல் தொடரில் லக்னோவில் விளையாடிய முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் மார்க் வுட். இங்கு ஆடிப் பழகியவர், தன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் தான் முரட்டு ஃபார்மில் இருக்கும் ரோஹித், கோலி போன்றோரை தடுக்க முடியும்.