மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
அதற்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை 44.1 ஓவரிலேயே எட்டி வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. 4 கேட்ச்களை கோட்டைவிட்ட இந்திய ஃபீல்டர்கள் போட்டியை ஆஸ்திரேலியாவிற்கு எளிதாக விட்டுக்கொடுத்தனர்.
ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில், இந்திய மகளிர் அணியின் இந்த செயல்பாடு மோசமான விமர்சனத்தை பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டியானது இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே இன்று நியூ சண்டிகரில் நடந்துவருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கி 14 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 117 ரன்கள் குவித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய 12வது சதமாகவும், ஒட்டுமொத்தமாக 15-வது சதமாகவும் பதிவுசெய்யப்பட்டது.
15 சர்வதேச சதங்களை பதிவுசெய்த முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையை மந்தனா படைக்க, தொடர்ந்து வந்த வீராங்கனைகள் 292 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு இந்தியாவை அழைத்துச்சென்றனர். 9வது வீராங்கனையாக களமிறங்கிய ஸ்னே ரானா அதிரடியாக 24 ரன்கள் அடித்து உதவினார்.
293 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிவரும் ஆஸ்திரேலியா அணி 62 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.