இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி pt web
கிரிக்கெட்

INDvNED | இந்தியா விட்ட ‘ராக்கெட்’களில் அதிர்ந்த பெங்களூரு.. ஒரேநாளில் ஓராயிரம் சாதனைகள்!

Angeshwar G

உலகக்கோப்பைத் தொடரின் கடைசி லீக் போட்டியில் நேற்று இந்திய அணி நெதர்லாந்துடன் மோதியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், கில், கோலி போன்றோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து 61 ரன்களை விளாச, மறுமுனையில் கில் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை அடித்து 51 ரன்களை குவித்தார். வழக்கம் போல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் ஒருநாள் போட்டிகளில் தனது 71 ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.

டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் தாண்டவம் ஆடிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும் கே.எல்.ராகுலும் இணைந்து அவர்களும் ருத்ரதாண்டவம் ஆடினர். இவர்கள் இருவரும் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து சதம் விளாசினர். 94 பந்துகளை ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்களை குவித்தார். அதில் 10 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடக்கம். 64 பந்துகளை மட்டுமே ஆடிய கே.எல்.ராகுல் 102 ரன்களை குவித்தார். அதில் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடக்கம். 62 பந்துகளில் சதமடித்ததன் மூலம் கே.எல்.ராகுல் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 63 பந்துகளில் சதமடித்த ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

50 ஓவர்களை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 410 ரன்களை குவித்தது. இதன்மூலம் இந்திய பேட்ஸ்மேன்களும் இந்திய அணியும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. அவற்றை பார்க்கலாம்...

* ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா உலகசாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் நடப்பாண்டில் மட்டும் அவர் 59 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் 58 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்தது.

* உலகக் கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மாவே முதலிடத்தில் உள்ளார். நடந்துவரும் உலகக்கோப்பைத் தொடரில் அவர் 23 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 22 சிக்ஸர்களை அடித்த இயான் மர்கன் இரண்டாவது இடத்திலும், 21 சிக்ஸர்களை அடித்த டிவில்லியர்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

* உலகக்கோப்பைகளில் ஒரு தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய கேப்டன்களின் பட்டியலிலும் ரோஹித் சர்மாவே முதலிடத்தில் உள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அவர் 503 ரன்களைக் குவித்துள்ளார். இதற்கு முன் சவுரவ் கங்குலி 2003 உலகக்கோப்பையில் 465 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது.

* உலகக்கோப்பை தொடரில் அதிகமுறை 500+ ரன்களை எடுத்தவர்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் 500+ ரன்களை அடித்திருந்தார். தற்போது ரோஹித் சர்மா 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 500+ ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக இரு உலகக்கோப்பை தொடர்களில் 500+ ரன்களை அடித்தவர் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளார்.

* நடப்பு உலகக்கோப்பையில் அதிகமுறை 50+ பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களாகவும் இந்தியர்களே உள்ளனர். விராட் - ஸ்ரேயாஸ் மற்றும் ரோஹித் - கில் ஜோடி 4 முறை 50+ பார்ட்னர்ஷிப்களை அமைத்துள்ளது.

* தனது 71 ஆவது அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி, ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார். 2003 ஆம் ஆண்டு சச்சினும், 2019 ஆம் ஆண்டு ஷாகிப் அல் ஹசனும் ஒரு தொடரில் 7 முறை அரைசதம் அடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த பட்டியலில் விராட்டும் இணைந்துள்ளார்.

* நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 594 ரன்களை குவித்துள்ளார் விராட்கோலி. அதில் 2 சதம் 5 அரைசதங்கள் அடக்கம்.

* ஒருநாள் போட்டிகளில் ஓரணியின் 5 பேட்ஸ்மேன்கள் 50+ ரன்களை அடித்துள்ளது இது நான்காவது முறை. உலகக்கோப்பைத் தொடரிலோ இதுதான் முதல்முறை. இதற்கு முன் இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 2 முறையும், ஜிம்பாவே அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஒருமுறையும் இச்சாதனையை செய்திருந்தது.

* நேற்றைய போட்டியில் மட்டும் இந்திய அணி 16 சிக்ஸர்களை விளாசி இருந்தது. உலகக்கோப்பையில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். முன்னதாக 2007 ஆம் ஆண்டு பெர்முடா அணிக்கெதிராக இந்திய அணி ஒட்டுமொத்தமாக 18 சிக்ஸர்களை அடித்திருந்தது. அதேபோல், ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலிலும் இந்திய அணியே முதலிடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி 215 சிக்ஸர்களை அடித்துள்ளது. இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி அடித்த 209 சிக்ஸர்களே சாதனையாக அமைந்தது.

* அதேபோல் உலகக்கோப்பையில் 4 ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்த தோனி - ரெய்னாவின் சாதனையை ஸ்ரேயாஸ் - ராகுல் ஜோடி முறியடித்துள்ளது. தோனி - ரெய்னா ஜோடி 2015 ஆம் ஆண்டு ஜிம்பாவேக்கு எதிராக நடந்த போட்டியில் 196 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி 208 ரன்களை நேற்றைய போட்டியில் குவித்துள்ளது.

* 411 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தேஜா நிதமான்ரு 54 ரன்களை எடுத்திருந்தார். பந்துவீச்சிலும் அசத்திய இந்திய அணி சீரான இடைவேளைகளில் விக்கெட்களை வீழ்த்திய வண்ணமே இருந்தது. பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

நேற்றைய போட்டியில் விராட், ரோஹித், கில், சூர்யகுமார் போன்றோரும் பந்துவீசினர். அதில் கோலி, ரோஹித் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். முடிவில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.

* உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜடேஜா முதலிடத்திற்கு முன்னேறினார். அவர் இதுவரை 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே, யுவராஜ் சிங் தலா 15 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

* இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, லீக் போட்டிகளில் தோல்வியே அடையாமல் அரையிறுதிக்கு சென்றுள்ளது. அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து உடனான அரையிறுதியில் இந்திய அணி தோற்ற நிலையில் நவம்பர் 15 தேதி நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியாவின் கனவாக உள்ளது.