கடந்த 10 ஆண்டுகளில் தொடர் வெற்றிகளின் மூலம் உச்சத்தில் இருந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, அண்மையில் 6 போட்டிகளில் 4ல் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் சரிவை சந்தித்துள்ளது. வலுவான பேட்டர்கள் இல்லாமை, பந்துவீச்சில் குழப்பம் மற்றும் நிலையான நம்பர் 3 பேட்டர் இல்லாமை போன்ற காரணங்களால் இந்தியா சொந்த மண்ணிலேயே தென்னாப்பிரிக்காவிடம் தொடரை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது..
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் உச்சத்தில் இருந்தது.. தோனி, கோலி என இரண்டு சிறந்த டெஸ்ட் கேப்டன்கள் வழிநடத்திய இந்திய அணி 2013 முதல் 2023 வரை 10 ஆண்டுகளில் 3 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே சொந்தமண்ணில் தோற்றிருந்தது..
ஆனால் கடைசி இரண்டு ஆண்டுகளில் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் தோற்று வரலாறு காணாத ஒரு சரிவை கண்டுள்ளது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி.. அணியில் வலுவான பேட்டர்கள் இல்லை, ஸ்பின்னர்களுக்கு எப்படி, எந்தவிதத்தில் பந்துவீசுவதென்று தெரியவில்லை, வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், பேட்டிங் ஆர்டரில் குழப்பம், நிலையான நம்பர் 3 பேட்டர் இல்லை என ஒட்டுமொத்தமாக அணியே ஒரு குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது..
சொந்த மண்ணிலேயே இப்படியான ஒரு சரிவை இந்தியா சந்தித்திருப்பது, 'இந்தியா சிறந்த டெஸ்ட் அணியாக இருந்தது' என கடந்த காலத்தைக் குறிப்பிட்டு இப்போதே பேசத்தொடங்கியிருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என இந்தியா வரலாற்று தோல்வியை சந்தித்ததிலிருந்து இந்த சரிவு தொடங்கியது.. அதனைத்தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் தொடரில் கையிலிருந்த போட்டிகளையெல்லாம் இழந்த இந்தியா, WTC உலகக்கோப்பை ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புகளையும் இழந்தது..
அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தபோதிலும், சிறந்த ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தவில்லை.. தொடர்ந்து சொந்தமண்ணில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட இந்தியா நிறைவான வெற்றியை பதிவுசெய்தது.. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனுபவமற்ற வீரர்களை கொண்டிருந்தது..
இந்தசூழலில் அனுபவமற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்களை கூட அடிக்கமுடியாமல் இந்தியா தோற்றபோதே இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவு தொடங்கிவிட்டது என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட்டிலாவது வெற்றிபெற்று தொடரை சமன்செய்துவிடுவார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்த இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.. குவஹாத்தியில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 489 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை 201 ரன்னில் சுருட்டி சிறந்த அடித்தளத்தை அமைத்தது.. 288 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா அணி தற்போது 500 ரன்களை கடந்து முன்னிலை வகிக்கிறது.. இன்று 4வது நாள் ஆட்டம் நடந்துவரும் நிலையில் ஒன்று இந்த போட்டி தோல்வி அல்லது சமனை நோக்கி செல்வது உறுதியாகிவிட்டது..
இதன்மூலம் இந்திய அணி எப்படியும் சொந்தமண்ணில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தொடரை இழப்பது நிகழப்போகிறது.. 2024 மற்றும் 2025 என அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து வரலாற்றில் மோசமான சாதனையை படைக்கவிருக்கிறது..