விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. அப்படியொரு போட்டியில்தான் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்குகிறது. கேப்டன் ரோகித் ஷர்மா பார்முக்கு திரும்பியிருப்பதாகவே தெரிவது சற்று ஆறுதலை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 19 ஒருநாள் போட்டிகளில் 873 ரன்களை குவித்திருக்கிறார் ரோகித் ஷர்மா.
தொடக்க வீரர் சுப்மான் கில்லின் சீரான ஆட்டம் அணிக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டுகிறது. ஒருநாள் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் சுப்மான் கில், இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசியிருக்கிறார். ஹாட்ரிக் சதத்தை துபாயில் காட்டுவாரா என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
அதேவேளையில் மத்திய வரிசையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரின் ஆட்டம் எந்தளவுக்கு கைகொடுக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. என்றாலும் விராட் கோலியின் வரலாறு வேறுமாதிரியானது. பாகிஸ்தானுக்கு எதிரான 16 போட்டிகளில் 678 ரன்களை குவித்திருக்கிறார் விராட் கோலி. ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு என ஏதாவது ஒருவகையில் கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். முஹமது ஷமி, ஹர்ஷித் ரானா ஆகியோரின் பந்துவீச்சு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் குல்தீப், அக்ஷர், ஜடேஜா, ஆகியோரின் சுழற்பந்துவீச்சு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இவர்களில் குல்தீப் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஆறு ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் . என்றாலும் ஆடுகளத்தின் தன்மை கருதி அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.