asia cup
asia cup pt web
கிரிக்கெட்

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்கள்!

Viyan

ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்திருக்கிறது. 17 பேர் கொண்ட அணியில் காயத்திலிருந்து திரும்பியிருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர். அயர்லாந்துக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் கம்பேக் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

INDvsPAK

2023 ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடக்கிறது. பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்திய அணியின் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை நடக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றிருக்கின்றன. இரு பிரிவிலும் முதலிரு இடங்கள் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றின் முடிவில் முதலிரு இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் முக்கிய தொடர் என்பதால் இந்த ஆசிய கோப்பை அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இத்தொடருக்கான அணி இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. 17 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. இதில் பெரிய அதிர்ச்சிகள் ஏதும் இல்லையென்றாலும், இளம் வீரர் திலக் வர்மாவுக்கு ஒருநாள் அணியில் முதல் முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Tilak Varma

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் டாப் ஸ்கோரராக விளங்கினார். இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் தேவை என்பதால் அவருக்கு இந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதைவிட முக்கியம் காயத்தால் அவதிப்பட்டிருந்த பேட்ஸ்மேன்கள் ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் இருவருமே இந்திய அணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தொடர் ஒரு நல்ல பரிட்சையாக இருக்கும். அதேபோல் காயத்திலிருந்து திரும்பி அயர்லாந்து அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் விளையாடிவரும் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இருவருமே அயர்லாந்துக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிவருகிறார்கள். ஓரளவு ஃபிட்டாகவும் இருக்கிறார்கள்.

shreyas iyer

இந்த நான்கு வீரர்களும் ஒருநாள் போட்டியில் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார்கள் என்பது இந்த ஆசிய கோப்பையில் தெரிந்துவிடும். எப்படியும் இந்த 17 பேரில் 15 வீரர்கள் தான் உலகக் கோப்பைக்குச் செல்வார்கள் என்பதால் நிச்சயம் இத்தொடர் அனைவருக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (கேப்டன்),

சுப்மன் கில்,

விராட் கோலி,

ஷ்ரேயாஸ் ஐயர்,

சூர்யகுமார் யாதவ்,

கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்),

இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்),

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி

திலக் வர்மா,

ஹர்திக் பாண்டியா (துணைக் கேப்டன்),

ரவீந்திர ஜடேஜா,

அக்‌ஷர் படேல்,

குல்தீப் யாதவ்,

ஜஸ்ப்ரித் பும்ரா,

முகமது ஷமி,

ஷர்துல் தாக்கூர்,

பிரசித் கிருஷ்ணா,

முகமது சிராஜ்.

அணியோடு பயணிக்கும் வீரர்: சஞ்சு சாம்சன்