IND vs Pak - BCCI
IND vs Pak - BCCI Twitter
கிரிக்கெட்

“எதற்காக இவ்வளவு சிறப்பு கவனிப்பு?.. IND-PAK போட்டியை புறக்கணிக்கிறோம்” - அதிருப்தியில் ரசிகர்கள்!

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய ஆடுகளங்களில் நடைபெறும், பிசிசிஐ முழுவதுமாக தொடரை எடுத்து நடத்தும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த தொடர் மீது இந்திய ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்துவந்தது. சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் என மூன்று இந்திய பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட் கொடுத்து கவுரவித்த பிசிசிஐ, உலகக்கோப்பையின் முதல்போட்டிக்கு 30ஆயிரம் முதல் 40ஆயிரம் வரையிலான பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

Sachin Tendulkar

அதனை தொடர்ந்து கிரிக்கெட்டின் கடவுள், லிட்டில் மாஸ்டர் என புகழப்படும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை 2023 உலகக்கோப்பை தூதுவராக ஐசிசி அறிவித்ததையொட்டி, இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனால் அதுவரை உலகக்க்கோப்பை தொடருக்கான ஏற்ப்பாட்டை சிறப்பாகவே செய்திருந்த பிசிசிஐ, ஒரு பெரிய கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க நாளில் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

கூட்டமே இல்லாமல் வெறும் ஆளாக கோப்பையோடு வந்த சச்சின்!

அனைத்தும் சிறப்பாக நடக்கும் உலகமே உலகக்கோப்பை தொடரை கொண்டாடப்போகிறது என நினைத்த போது, போட்டியில் ரசிகர்கள் இன்றி மைதானமே வெறிச்சோடி காணப்பட்டது. கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஒரு லெஜண்ட் கையில் உலகக்கோப்பையை கொண்டுவரும் போது, எந்த ஒரு சத்தமோ ஆரவாரமோ எதுவும் இன்றி வெற்றிச்சோடி காணப்பட்டது. கோப்பையை வைத்துவிட்டு கமண்டரி பாக்ஸுக்கு சச்சின் டெண்டுல்கர் சென்ற போது, அங்கிருந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் இப்படி ஒரு ஓப்பனிங்க் போட்டியை வரலாற்றில் பார்க்கவில்லை என கூற “என்ன சொல்வதென்று தெரியாமல், சச்சின் டெண்டுல்கர் சிரித்துகொண்டு மட்டும் அமர்ந்திருந்தார்”.

sachin

தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது, போட்டியின் அட்டவணைகள் மாற்றப்பட்டது, டிக்கெட் சிக்கல்கள், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவரும் மற்றநாட்டு அணிகளுக்கு விசா தாமதம், பாதுகாப்பு காரணமாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த பயிற்சி ஆட்டங்கள், தொடக்க ஆட்டத்தில் முற்றிலும் காலியான மைதானம்” என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் ஏமாற்றியது மட்டுமல்லாமல், 30,000 முதல் 40,000 வரையிலான பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என கூறியது “இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தானே தவிர முதல் போட்டிக்கு அல்ல” என போட்டிக்கு பெண்கள் அனவரையும் திருப்பி அனுப்பியது பிசிசிஐ.

இதை அனைத்தையும் கவனித்த ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ஒரு உலகளாவிய நிகழ்வை நடத்த இந்தியா சரியான இடமா? இதுபோலான ஒரு ஓப்பனிங் போட்டியை நாங்கள் பார்த்ததேயில்லை, எங்கே கூட்டம்? என பல்வேறு விமர்சனங்களை வைத்தனர்.

ஆனால் அனைத்தையும் காதில் போட்டுக்கொள்ளாத பிசிசிஐ, இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஏதோ தொடரின் முதல் போட்டியை போலும், பாகிஸ்தான் அணி தான் முக்கியமான அணியை போலும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது.

கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!

உலகக்கோப்பையின் முதல் போட்டிக்கு எந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யாத பிசிசிஐ, தொடரின் 12வது லீக் போட்டியான இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டியை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள பி.சி.சி.ஐ, “போட்டி தொடங்க 45 நிமிடத்திற்கு முன்னதாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றும், இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்” என்றும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் அகமதாபாத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியை வரவேற்கும் விதமாக கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது பிசிசிஐ.

பிசிசிஐ-ன் இத்தகைய செயலை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “ஒரு உலகக்கோப்பையை தொடர் என்பது அனைத்து உலக நாடுகளும் பங்கேற்று விளையாடுவது. இந்தியா-பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு மட்டும் நடைபெறுவது அல்ல. அவர்கள் அனைவரும் உலகத்தரம் வாய்ந்த அணிகள், அவர்களுக்கான மரியாதை செய்யப்படாமல் ஒரு லீக் போட்டிக்கு இப்படி செய்வது மன்னிக்க முடியாத ஒன்றாகும்” என அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பலர் “அவர்கள் எல்லோருமே எங்களுடைய உலகக்கோப்பை ஹீரோக்கள் தான், முதல் போட்டிக்கு நிகழ்ச்சிகள் இல்லாமல் தற்போது நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது” என பதிவிட்டுள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்கிறோம்! டிரெண்டிங் செய்துவரும் ரசிகர்கள்!

பிசிசிஐ-ன் இந்த மோசமான செயலையும், பாகிஸ்தான் அணிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தேவையற்றது என்றும் குற்றஞ்சாட்டி வரும் பெரும்பாலான இந்திய ரசிகர்கள், எக்ஸ் வலைதளத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து “#ShameOnBCCI, #BoycottIndoPakMatch” என டிரெண்ட் செய்து வருகின்றனர்.