நடராஜன் கிரிக்கெட் மைதானம்
நடராஜன் கிரிக்கெட் மைதானம் PT
கிரிக்கெட்

‘எனக்கு இந்த சிந்தனை வரவில்லை’ - நடராஜனின் கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்த தினேஷ் கார்த்திக்

PT WEB

ஒரு காலத்தில் கிரிக்கெட் என்பது பணக்கார விளையாட்டு என்று கூறப்பட்டது. அதற்கேற்றார் போல் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது. ஆனால், இது எல்லாவற்றையும் மீறி திறமையிருந்தால் இந்திய அணியில் கூட விளையாட முடியும் என்ற ஒரு பெரிய இலக்கை எட்டிப்பிடித்துள்ளார் இந்திய வேகப் பந்துவீச்சாளர் நடராஜன். டிஎன்பிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சிறப்பான யார்க்கர் மற்றும் டெத் பவுலிங்கால் அவர் இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டார்.

T Natarajan

மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜனின் வெற்றி தமிழ்நாட்டினுடைய வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் தன்னைப்போல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற வேட்கையுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர நடராஜன். 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த மைதானம் பெரிய நகரங்களில் வைக்கப்படாமல், கிராமமான சின்னப்பம்பட்டியில் வைக்கப்பட்டிருப்பது தான் பல பாராட்டுகளை நடராஜனுக்கு பெற்றுத்தந்துள்ளது.

”இதுபோன்ற ஒரு எண்ணம் எனக்கு வரவில்லை!” - தினேஷ் கார்த்திக்

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்திலிருந்து சென்று யார்க்கர் மன்னன் என்று பெயர் பெற்றுள்ள நடராஜன் தனது சொந்த ஊரிலேயே ஐந்து ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளார். இந்த மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். இதற்கான விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, கிரிக்கெட் வீரர்கள் விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், பிரபல திரைப்பட நடிகர்கள் யோகி பாபு, படவா கோபி, புகழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா

தொடக்க விழாவில் உரையாற்றிய தினேஷ் கார்த்திக், தான் பிறந்து வளர்ந்த பகுதியில் தன்னை போல் வீரர்களை உருவாக்க வேண்டும் என்று நடராஜன் மேற்கொண்டுள்ள முயற்சியை வெகுவாக பாராட்டினார். மேலும் அவர் பேசும்போது, “இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் எனக்கு இதுபோன்ற ஒரு சிந்தனை வரவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணி உடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ஆஸ்திரேலியா முன்னணி வீரர்கள் பலர் நடராஜன் குறித்து விசாரித்தனர். அந்த அளவிற்கு தனது திறமையால் பலரது கவனத்தை ஈர்த்தவர் நடராஜன்” என்று குறிப்பிட்டார்.

நடராஜன் கிரிக்கெட் மைதானம்

இதனைத் தொடர்ந்து நடராஜன் கிரிக்கெட் மைதானத்தில் அவர் பந்து வீச நடிகர் யோகி பாபு பேட்டிங் செய்து அசத்தினார். தொடர்ந்து நடராஜன், யோகி பாபு பந்து வீச இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்தார்.