அஸ்வின் - ஜடேஜா web
கிரிக்கெட்

"அஷ்வின், ஜடேஜா இருவராலுமே எல்லாப் போட்டியையும் வென்றுதர முடியாது" - கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரின் மீதும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.

Viyan

நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது இந்தியா. பெங்களுருவில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளில் தோற்றிருந்த இந்தியா, புனேவில் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் மோசமாக ஆடிய இந்திய அணி 113 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தோற்காமல் இருந்த அவர்களின் அசாத்திய பயணம் முடிவுக்கு வந்தது.

ind vs nz

இந்தப் போட்டியில் சீனியர் ஸ்பின்னர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் செயல்பாடு பெரும் விமர்சனத்துக்குள்ளானது. முதல் இன்னிங்ஸின் முதல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அஷ்வின் அதன்பின் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஜடேஜா முதல் இன்னிங்ஸில் விக்கெட்டே வீழ்த்தவில்லை.

Ashwin - Jadeja

இரண்டாவது இன்னிங்ஸிலும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. அஷ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, மூன்றாவது நாள் காலையில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜடேஜா. நியூசிலாந்து ஸ்பின்னர்களை விக்கெட்டுகளை வாரிகுவிக்க, இந்தியாவின் அனுபவ ஸ்பின்னர்கள் தடுமாறியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அஷ்வின், ஜடேஜா இருவராலுமே எல்லாப் போட்டியையும் வென்றுதர முடியாது..

போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் இதுபற்றி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்குப் பதிலளித்த ரோஹித், "அஷ்வின் மற்றும் ஜடேஜா இருவரின் மீதும் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு அணியையும் நிலைகுலையவைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தியாவுக்குப் போட்டிகளை வென்று கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது சரியில்லை என்று நான் நினைக்கிறேன். இந்தியா போட்டிகளை வெல்லவேண்டும் என்றால் அதற்கான பொறுப்பு ஒட்டுமொத்தமாக எங்கள் அனைவருக்குமே இருக்கிறது. அது அந்த இரண்டு வீரர்களுக்கு மட்டும் இருக்கவேண்டும் என்று நினைப்பது சரியானது அல்ல" என்று கூறினார்.

R Ashwin

மேலும் பேசிய அவர், "அவர்களின் திறமைக்கும் அனுபவத்துக்கும், அவர்கள் என்ன செய்தார்கள், எதை செய்யவில்லை, எதை சரியாக செய்ய முடியவில்லை என்ற அனைத்து விஷயங்களும் அவர்களுக்கே தெரியும். அதேசமயம் அவர்கள் இருவரும் இங்கு எக்கச்சக்க கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். அணிக்காக அளவற்ற பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியா தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை இந்திய மண்ணில் வெற்றி பெற்றதற்கு மிகமுக்கியக் காரணமாக விளங்கியிருக்கிறார்கள். அந்த அசாத்திய பயணத்தில் இவர்களின் தாக்கம் அளப்பரியது. அதனால் நான் அதிகம் இந்த செயல்பாட்டைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. அதிலும் குறிப்பாக இவர்கள் இருவரின் செயல்பாட்டைப் பற்றியும் நான் பெரிதாக ஆராயப் போவதில்லை" என்றார்.

ஜடேஜா

போக, அவர்களுக்கு அவ்வப்போது மோசமான தினங்கள் அமையும் என்றும், அப்படிப்பட்ட நேரத்தில் மற்றவர்கள் அனைவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் ரோஹித். "அவர்கள் இருவருக்கும் என்ன நடந்திருக்கிறது என்று நன்றாகவே தெரியும். அவர்களுக்கும் ஓரிரு மோசமான நாள்கள், மோசமான போட்டிகள் அமையவே செய்யும். ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருக்கவேண்டும் என்று நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அது ஒவ்வொரு முறையும் நடக்கப் போவதில்லை. அதனால் மற்ற வீரர்களும் அந்த இடத்தில் பொறுப்புகளை எடுத்துக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

பேட்டிங் யூனிட் என்று வரும்போது நாம் இப்படி அணுகுவது இல்லை அல்லவா. ஓரிரு பேட்ஸ்மேன்களிடம் மட்டும் எதிர்பார்ப்பு வைக்காமல், ஒரு யூனிட்டாக அனைத்து பேட்ஸ்மேன்களுமே சேர்ந்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பௌலிங்கிலும் அதே போலத்தான். அஷ்வின் சரியாகச் செயல்படவில்லை என்றால், அங்கு ஜடேஜா பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வாஷிங்டன் சுந்தரோ, குல்தீப் யாதவோ, அக்‌ஷர் படேலோ அங்கு தங்கள் பங்களிப்பைக் கொடுக்கவேண்டும்" என்று கூறினார் இந்திய கேப்டன்.

வாஷிங்டன் சுந்தர்

சீனியர் ஸ்பின்னர்கள் இந்தப் போட்டியில் தடுமாறினாலும் இளம் தமிழக ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் இந்தப் போட்டியில் அசத்தலாக செயல்பட்டார். முதல் இன்னிங்ஸில் 7, இரண்டாவது இன்னிங்ஸில் 4 என மொத்தம் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார் அவர். அதுபற்றிப் பேசிய ரோஹித், "இந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரது செயல்பாடு எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவரும் அவரது செயல்பாட்டை நினைத்து பெருமை கொள்கிறார். ஒரு அணியாக நாங்கள் அனைவருமே அவரது பௌலிங்கால் திருப்தி அடைந்திருக்கிறோம். அவர் மிகவும் அற்புதமாகப் பந்து வீசினார்" என்று பேசினார்.