வெஸ்ட் இண்டீஸ் இந்திய சுற்றுப்பயணத்தின் முதல் ஒருநாள் போட்டியில், இந்தியாவின் புதிய வேகப்பந்துவீச்சு அணியை கடுமையாக தாக்கியது. காம்பெல், க்ரீவ்ஸ் இருவரும் அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தனர். நிதிஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் கட்டுப்பாடற்ற பந்துவீச்சு ரசிகர்களை வேதனைக்குள்ளாக்க, ரோகித் சர்மா வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார். இதே நேரத்தில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்கு நம்பிக்கையளித்தார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் 2 மணிக்கு தொடங்கியது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜுக்கு இடம் அளிக்கப்படவில்லை, 2027 உலகக்கோப்பைக்கு முந்தைய தயாரிப்பாக பார்க்கப்படும் நிலையில் பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார் போன்ற அனுபவம் இல்லாத பவுலிங் யூனிட்டோடு இந்தியா சென்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, குல்தீப் யாதவ், ஜடேஜா, நமன் திர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வேகப்பந்துவீச்சு யூனிட்டை சிதறடித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய காம்பெல், க்ரீவ்ஸ் இருவரும் அரைசதமடித்து முதல் விக்கெட்டுக்கே 135 ரன்கள் சேர்த்தனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் விக்கெட்டை வீழ்த்த போராடிய நிலையில், குல்தீப் யாதவ் முதல் விக்கெட்டை எடுத்துவந்தார்.
அதற்கு பிறகும் இந்திய வேகப்பந்துவீச்சின் பவுலிங் மோசமானதாகவே இருந்தது. 2வது ஓவரை வீசிய நிதிஷ் குமார் ரெட்டி 4 பவுண்டரிகள் ஒரு நோ-பால் உட்பட 17 ரன்கள் கொடுத்தார். அதற்குபிறகு அவருக்கு கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பே வழங்கவில்லை. மாற்று பவுலராக வந்த குர்னூர் பிராரும் ரன்களை விட்டுக்கொடுக்க, பிரசித் கிருஷ்ணாவும் தொடர்ந்து 3 பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார். ஷார்ட் பிட்ச் பந்துகள், புல்-டாஸ் பந்துகள் என மோசமாக பந்துவீசிய நிலையில், களத்தில் இருந்த ரோகித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஒரே நம்பிக்கையாக இருந்த குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒரு நேரத்தில் 192 ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, குல்தீப் யாதவின் அடுத்தடுத்த 6 பந்தில் 3 விக்கெட்டை இழந்து 198 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.