நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என வென்றது இந்தியா cricinfo
கிரிக்கெட்

இந்திய பவுலர்களுக்கு பயம்காட்டிய ஃபின் ஆலன்.. 4-1 என தொடரை வென்றது இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வென்றது இந்திய அணி..

Rishan Vengai

இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரில், கடைசி போட்டியில் இந்தியா 271 ரன்கள் குவித்து, 4-1 என தொடரை வென்றது. இஷான் கிஷன் 42 பந்தில் சதமடித்து, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினர். ஃபின் ஆலன் நியூசிலாந்து அணிக்காக 80 ரன்கள் அடித்தும், இந்திய பவுலர்களை மிரட்டியபோதும், நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியா-நியூசிலாந்து அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 4 போட்டிகள் முடிவில் 3 போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றது.

இந்தியா - நியூசிலாந்து

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

4-1 என தொடரை வென்ற இந்தியா..

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் 42 பந்தில் சதத்தால் 271 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 63 ரன்களும், ஹர்திக் பாண்டியா 42 ரன்களும் சேர்த்து உதவினர்.

இந்தசூழலில் 272 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் என அனைத்து இந்திய பவுலர்களையும் சிக்சர் பவுண்டரி என சிதறடித்த ஃபின் ஆலன் மிரட்டிவிட்டார். கடைசி வரை போட்டி செல்லுமோ என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், 38 பந்தில் 80 ரன்கள் அடித்து வெளியேறினார் ஃபின் ஆலன். அதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.

தொடர்ந்து வந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் போன்ற வீரர்கள் போராடினாலும் 225 ரன்களுக்கு 19.4வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது நியூசிலாந்து அணி. கடைசியில் வந்து சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வென்றது இந்தியா.