வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களும், சுப்மன் கில் 129* ரன்களும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததுடன், 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதில் ஜான் கேம்பெல் (115), ஷாய் ஹோப் (103) ஆகிய இரு வீரர்களும் சதமடித்தனர். இதையடுத்து, இந்திய அணிக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 121 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி, நான்காவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் (25), சாய் சுதர்சன் (30) ஆகியோர் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தின்போது சாய் சுதர்சன் 39 ரன்னில் வீழ்ந்தார் அடுத்து வந்த சுப்மன் கில் 13 ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். எனினும் கே.எல்.ராகுல், அரைசதம் அடித்த நிலையில் இந்தியாவையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கே.எல்.ராகுல் (58), துருவ் ஜுரல் (6) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 2-0 என வித்தியாசத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.