இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக, முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று லக்னோ மைதானத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆப்கான் அணி, முதலில் இந்தியாவைப் பேட் செய்யப் பணித்தது. அதன்படி, இந்தியாவின் இன்னிங்ஸை யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ரோகித் சர்மாவும் தொடங்கினர்.
இதில், ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியுடன் பெவிலியன் திரும்ப, ரோகித்துடன் கேப்டன் சுப்மன் கில் கைகோர்த்தார். இருவரும் ஏதுவான பந்துகளைப் பவுண்டரி எல்லைக்கு அனுப்பியதுடன் ரன் குவிப்பிலும் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில், ரோகித் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 48 ரன்களில் ரஷீத்கான் பந்துவீச்சில் போல்டானார். என்றாலும் அவருக்குப் பின் களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, இருவரும் இணைந்து ஆப்கான் பந்துவீச்சைச் சிதறடித்தனர். இதனால் ரன்ரேட்டும் உயர்ந்த நிலையில், அவர்கள் இருவரும் சதமடித்தனர். இஷான் கிஷன் 79 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 125 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுபோல், சுப்மன் கில்லும் 110 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 154 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 26 ரன்கள் எடுக்க, இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் அவ்வணிக்கு எதிராக இந்தியா, இரண்டாவது முறை அதிக ரன்கள் குவித்துள்ளது.
முன்னதாக, 2015ஆம் ஆண்டு 417/6 எடுத்திருந்தது. அதேபோல், ஒருநாள் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட ரன்களை இந்தியா 8 முறை எடுத்து, தென்னாப்பிரிக்காவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டது. ஆப்கான் தரப்பில் கரோட்டி 4 விக்கெட்களையும், ரஷீத்கான் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் அணிக்கு தொடக்க வீரர் குர்பஷ் (41 ரன்கள்) நல்ல தொடக்கம் கொடுத்தார். அதேபோல், சேதிகுல்லா அடல் 42 ரன்கள் எடுத்தார். எனினும் மற்றவர்கள் வந்தவேகத்தில் பெவிலியன் திரும்ப, ரஹ்மத் ஷா மட்டும் தனியொருவனாகப் போராடினார். ஆனாலும் அவரது போராட்டம் வீணாய்ப் போனது. இறுதியில் அவர் 79 ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானின் தோல்வி உறுதியானது. அவ்வணி 44.3 ஒவர்களில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து, இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் இறுதிப் போட்டி வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.