இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி இந்தியாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ராகுல் - ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஜெய்ஸ்வால் 161 ரன்களும், ராகுல் 77 ரன்களும் அடித்தனர். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் சதம் அடித்து அணிக்கு வலுசேர்த்தார். இதன் மூலம் 487 ரன்களுக்கு இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
534 என்ற இமாலைய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 12 ரன்களில் 3 விக்கெட்களை இழந்ததது. லபுசானே விக்கெட்டுடன் 3 ஆம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்றும் இந்திய அணியின் பந்துவீச்சில் விக்கெட்கள் மளமளவென விழுந்தன. ஆனால், ரன்களும் வேகமாக உயர்ந்தது. ஆட்டம் தொடங்கியதும் கவாஜாவை சிராஜ் காலி செய்தார். பின் இணைந்த ஸ்மித்தும் ட்ராவிஸ் ஹெட்டும் நிலையான பார்ட்னர்ஷிப்பை அமைக்க முயன்றனர். ஆனால், சற்று நேரத்தில் ஸ்மித்தையும் சிராஜ் வெளியேற்றினார். மறுமுனையில் ட்ராவிஸ் ஹெட் அதிடடியாக ஆட ஆஸ்திரேலிய அணியின் ரன் கொஞ்சம் வேகமாக உயர்ந்தது. அரைசதம் கடந்து இந்திய அணிக்கு தலைவலியாக இருந்த ஹெட்டை பும்ரா தூக்கினார்.
பின்னர் மிட்செல் மார்ஷும், அலெக்ஸ் கேரியும் நிலையாக ஆட முயன்று இந்திய அணியின் பந்துவீச்சில் தோற்றுப்போக இறுதியில் ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முடிவில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் கேப்டன் பும்ரா 3 விக்கெட்களையும், சிராஜ் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினர்,. வாஷிங்டன் சுந்தர் 2, ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்திய அணியின் இந்த வெற்றி மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரோகித், கில், அஸ்வின், ஷமி என ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் இந்திய அணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.. இவர் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தம் மொத்தம் 8 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.