pak vs ind x page
கிரிக்கெட்

Asia cup Final.. வரலாற்றில் முதல்முறையாக மோதப்போகும் INDVPAK!

41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

Prakash J

41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், இலங்கையும் வங்கதேசமும் வெளியேறிய நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுக்கு இடையே சச்சரவுகள் நீடித்து வரும் நிலையில், இது மேலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அதிலும், 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்த 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியா 8 முறை கோப்பைகளை உச்சி முகர்ந்துள்ளது. பாகிஸ்தான் 2 முறை கைப்பற்றியுள்ளது. எனினும், இவ்விரு அணிகளும் நேருக்குநேர் இறுதிப்போட்டியில் சந்தித்ததில்லை. பெரும்பாலும் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுடனேயே அவை மோதியுள்ளன. இந்த நிலையில்தான் செப்.28ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதற்கிடையே நடப்புத் தொடரில் லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியினருக்கு கைகுலுக்காததும், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் சைகைகளைக் காட்டியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ind vs pak

இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, “நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் நாங்கள் எல்லோரையும் வெல்லும் அளவுக்கு நல்ல அணியாக இருக்கிறோம். நாங்கள் இறுதிப்போட்டியில் அவர்களை வெல்ல முயற்சிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.