2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.
11 லீக் போட்டிகள் முடிவை பெற்றுள்ள நிலையில் 8 அணிகளிலிருந்து ‘இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா’ என 4 அணிகள் அரையிறுதியை சீல் செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்புடன் நடைபெறவிருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், விளையாடியிருக்கும் 2 லீக் போட்டிகளிலும் வெற்றியை பெற்று ஒரே புள்ளிகளுடன் நீடிக்கின்றன. இந்த சூழலில் பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கான மோதல் இன்று நடைபெறுகிறது.
இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் மோதின, அதில் நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது இந்திய அணி.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு அணிகளும் ஒரே ஒருமுறை மட்டுமே மோதியிருக்கும் நிலையில், அதில் நியூசிலாந்து அணியே வெற்றிபெற்றுள்ளது.
இரண்டு அணிகளின் பலத்தை பொறுத்தவரையில், பேட்டிங்கில் இரு அணிகளும் சமமான பலத்தையே பெற்றுள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்திய அணி சற்று வலிமையான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ளது. ஆனால் இடது கை சுழற்பந்துவீச்சாளரான மிட்செல் சாண்ட்னர் இந்தியாவிற்கு எதிரான முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதால் அவரை எப்படி இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எதிர்கொள்ளப்போகின்றனர் என்பது சவாலாக இருக்கப்போகிறது.
மற்றபடி இரண்டு அணிகளுமே சரிசமமான பலத்தை கொண்டிருக்கும் நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரிடமும் இருந்துவருகிறது.