Raj Limbani / U-19 India Player
Raj Limbani / U-19 India Player X
கிரிக்கெட்

3 ஓவர் மெய்டன்.. 7 விக். வீழ்த்தி அபாரம்! 52 ரன்னில் ALL OUT! இந்திய வேகப்பந்துவீச்சில் புதிய ஹீரோ!

Rishan Vengai

ஆசிய அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. டிசம்பர் 8ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் முதலிய 8 அணிகள் விளையாடிவருகின்றன.

இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள அணிகளில் A பிரிவில்-இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள் முதலிய அணிகளும், B பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் முதலிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றை பொறுத்தவரையில் 4 அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் ஒவ்வொரு அணிகளும் மற்ற 3 அணிகளோடு தலா ஒருமுறை மோதும். இந்நிலையில் பட்டியலில் முதலிரண்டு இடத்தை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெறும்.

நேபாளை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியும் சந்தித்த இந்திய அணி, 3வது போட்டியில் இன்று நேபாளை எதிர்த்து விளையாடியது. பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி, ராஜ் லிம்பானியின் அபாரமான பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 22.1 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 52 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர் விளையாடிய இந்திய அணி 7.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.

Raj Limbani

கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி பந்துவீச்சில் கோட்டை விட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் நேபாளுக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்தியது. பந்துவீச்சில் 9.1 ஓவரை வீசிய ராஜ் லிம்பானி 3 ஓவர்களை மெய்டனாக வீசி, வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல பேட்டிங்கில் அதிரடி காட்டிய தொடக்க வீரர் அர்ஸின் குல்கர்னி 1 பவுண்டரி 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு 43 ரன்கள் அடித்து இந்தியாவை எளிதான வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

IND U-19

A பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் நிலையில் இருக்கின்றன. நாளை நடைபெறும் 2 போட்டிகளுக்கு பிறகு எந்தெந்த அணி B பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பது தெரியவரும்.