ind vs sl x page
கிரிக்கெட்

Womens World Cup | 8 அணிகள் பங்கேற்பு.. இன்றைய போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதல்!

இன்று தொடங்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

Prakash J

இன்று தொடங்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி, நவம்பர் 2 வரை நடைபெறவுள்ளன. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போட்டிகள் இந்தியாவிற்குத் திரும்பியுள்ள நிலையில், உள்நாட்டில் நடைபெறும் முதற்கட்ட லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை, வெறும் ரூ.100 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒருவேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். அட்டவணையின்படி, இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி உலகக் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் இறுதி ஆட்டங்கள் வரை சென்றிருக்கிறது. இந்திய அணியை வழிநடத்தும் 36 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு இது 5-வது உலகக் கோப்பை போட்டியாகும். அனேகமாக அவருக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். சொந்த மண்ணில் முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்தும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் இந்திய அணியில் கேப்டன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ராதா யாதவ், ரிச்சா கோஷ் ஆகிய அனுபவ வீராங்கனைகள் நம்பிக்கை அளிக்கிறார்கள். அதிலும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சமீபகாலமாக பேட்டிங்கில் அசத்தி வருகிறார். மேலும், உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாகும். கேப்டன் ஹா்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அண்மையில் ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் வென்ற உத்வேகத்துடன் இந்தப் போட்டிக்கு வந்துள்ளது. அதற்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

ind vs sl

அதேநேரத்தில், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியக்கூட நெருங்கியதில்லை. எனினும், தான் ஓய்வு பெறுவதற்குள் அரைஇறுதியில் கால்பதித்துவிட வேண்டும் என்பதே தற்போதே இலங்கை கேப்டனின் கனவாக இருக்கிறாது. ஆகவே, போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டுவதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.

மகளிர் உலகக் கோப்பையின் கடந்தஇகால சாம்பியன்கள் யார்?

1973: இங்கிலாந்து

1978: ஆஸ்திரேலியா

1982: ஆஸ்திரேலியா

1988: ஆஸ்திரேலியா

1993: இங்கிலாந்து

1997: ஆஸ்திரேலியா

2000: நியூசிலாந்து

2005: ஆஸ்திரேலியா

2009: இங்கிலாந்து

2013: ஆஸ்திரேலியா

2017: இங்கிலாந்து

2022: ஆஸ்திரேலியா

இதில் ஆஸ்திரேலியா 7 முறையும், இங்கிலாந்து 5 முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் வென்றுள்ளன.