Indian captain Harmanpreet Kaur
Indian captain Harmanpreet Kaur Shashank Parade
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடருமா..?

Viyan

ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 தொடர்களில் மோதும் இந்திய பெண்கள் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் 16 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கும் பிசிசிஐ, 14 வீராங்கனைகளை இரண்டு ஃபார்மட்டுக்குமே தேர்வு செய்திருக்கிறது.

India Women’s captain Harmanpreet Kaur

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பூஜா வஸ்த்ரகார் 4 விக்கெட்டுகளும், ஸ்நே ராணா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. ஸ்மிரிதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமீமா ராட்ரீக்ஸ், தீப்தி ஷர்மா என நான்கு வீராங்கனைகள் அரைசதம் அடிக்க, 406 ரன்கள் குவித்தது இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 261 ரன்கள் எடுத்தது. ஸ்நே ராணா 4 விக்கெட்டுகள் எடுத்தார். 75 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. 7 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்நே ராணா பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார்.

ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியையும் வென்ற இந்திய அணி, அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டியை வென்ற உத்வேகத்தோடு இந்தத் தொடரிலும் இந்திய அணி செயல்பட்டு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அணியையே இந்தத் தொடருக்கும் தேர்வு செய்திருக்கிறது இந்திய தேர்வுக் குழு. அதிகமான இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் அதே பாணியையே இப்போதும் தொடர்ந்திருக்கிறார்கள். அமஞ்ஜோத் கௌர், ஷ்ரேயங்கா பாடில், மன்னத் கஷ்யப், சைகா இஷாக் என அந்த புதிய பட்டாளம் மீது நம்பிக்கை வைத்து இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறது இந்திய அணி. இந்த வீராங்கனைகள் ஒருநாள், டி20 என இரண்டு ஃபார்மட்டுக்கான அணிகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள். கனிகா அஹுஜாவும் மன்னு மணியும் டி20 அணியில் மட்டும் இடம் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் பதிலாக ஒருநாள் அணியில் ஸ்நே ராணாவும் ஹர்லீன் தியோலும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்தியா ஒருநாள் ஸ்குவாட்

ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஜெமீமா ராட்ரீக்ஸ், ஷஃபாலி வெர்மா, தீப்தி ஷர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமஞ்ஜோத் கௌர், ஷ்ரேயங்கா பாடில், மன்னத் கஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், திதாஸ் சாது, பூஜா வஸ்த்ரகார், ஸ்நே ராணா, ஹர்லீன் தியோல்.

இந்தியா T20I ஸ்குவாட்

ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஜெமீமா ராட்ரீக்ஸ், ஷஃபாலி வெர்மா, தீப்தி ஷர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமஞ்ஜோத் கௌர், ஷ்ரேயங்கா பாடில், மன்னத் கஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், திதாஸ் சாது, பூஜா வஸ்த்ரகார், கனிகா அஹுஜா, மின்னு மணி.

இந்தியா vs ஆஸ்திரேலியா அட்டவணை

முதல் ஒருநாள் - டிசம்பர் 28, வான்கடே
இரண்டாவது ஒருநாள் - டிசம்பர் 30, வான்கடே
மூன்றாவது ஒருநாள் - ஜனவரி 2, வான்கடே
முதல் டி20I - ஜனவரி 5, DY பாடில் ஸ்டேடியம்
இரண்டாவது டி20I - ஜனவரி 7, DY பாடில் ஸ்டேடியம்
மூன்றாவது டி20I - ஜனவரி 9, DY பாடில் ஸ்டேடியம்