இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிய மூத்த வீரர்கள் இல்லாமல் சென்றிருக்கும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் தான் தொடரை உயிர்ப்பு நிலையில் வைத்திருக்க முடியும் என களமிறங்கியது இந்தியா.
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. இரட்டை சதமடித்த சுப்மன் கில் 269 ரன்கள் குவித்தார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஜேமி ஸ்மித் (184*) மற்றும் ஹாரி ப்ரூக் (158) இருவரின் சதத்தின் உதவியால் 407 ரன்கள் சேர்த்தது.
180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில்லின் சதமடிக்க 427/6 அடித்து டிக்ளார் செய்தது.
இந்நிலையில் 608 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதன் மூலம் 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது இந்தியா. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 58 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவுசெய்தது இந்தியா. 1967-லிருந்து விளையாடி வந்த இந்தியா சுப்மன் கில் தலைமையில் முதல் வெற்றியை பதிவுசெய்து சாதனை படைத்தது.