இந்தியா - ஆஸ்திரேலியா pt
கிரிக்கெட்

14 ஆண்டுகால தோல்வியின் வலி.. ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது இந்தியா! இறுதிப்போட்டிக்கு தகுதி!

2024 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

ind vs aus

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.

இந்நிலையில் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்று பலப்பரீட்சை நடத்தின.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது இந்தியா!

பரபரப்பாக தொடங்கிய அரையிறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் 39 மற்றும் 61 ரன்கள் அடிக்க, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை 264 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.

அலெக்ஸ் கேரி

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி அதிரடியாக தொடங்கினார். ஆனால் 8 ரன்னில் போல்டாகி வெளியேறிய சுப்மன் கில் சொதப்ப, 28 ரன்னில் அவுட்டாகி வெளியேறிய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிமீது அழுத்தத்தை ஏற்படுத்தி வெளியேறினார்.

இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸ்திரேலியாவின் கையிலிருந்து போட்டியை இந்தியாவின் பக்கம் எடுத்துவந்தனர்.

விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர்

சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் வெளியேற, அடுத்தவந்த அக்சர் பட்டேல் அழுத்தம் சேராமல் ஸ்ரேயாஸ் ஐயர் விட்ட இடத்திலிருந்து சிறப்பாக ஆடினார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 84 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்ய, அக்சர் பட்டேல் 27 ரன்கள், கேஎல் ராகுல் 42 ரன்கள், ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் என அடித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

ind vs aus

48.1 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

14 ஆண்டுகால தோல்விக்கு பழிதீர்த்த இந்தியா!

2011 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியை ஐசிசி தொடரின் நாக்அவுட் போட்டிகளில் இந்திய அணி வீழ்த்தியதேயில்லை. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு தோல்வியையே ஆஸ்திரேலியா பரிசளித்துவந்தது.

2023 world cup final

2015 உலகக்கோப்பை அரையிறுதி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என ஆஸ்திரேலியாவிடம் தோற்று 3 ஐசிசி கோப்பைகளை இழந்துள்ளது இந்திய அணி. அதிலும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் சொந்தமண்ணில் படுதோல்வியை சந்தித்தது இந்தியா.

ஹர்திக் பாண்டியா

இந்நிலையில்14 ஆண்டுகால தோல்வியின் காயங்களுக்கு 2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து பழிதீர்த்துள்ளது இந்திய அணி.