India - Pakistan
India - Pakistan Twitter
கிரிக்கெட்

இந்தியா - பாக். மோதும் உலகக்கோப்பை போட்டிக்கான தேதி மாற வாய்ப்பு! நவராத்திரி காரணமா?

Rishan Vengai

2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர், வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருந்த ஐசிசி, அதிக எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை அக்டோபர் 15-ம் தேதிக்கு பட்டியலிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த போட்டியை அக்டோபர் 14-ம் தேதி நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை முன்கூட்டியே நடத்த என்ன காரணம்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருக்கும் அதே (அக்டோபர்-15) நாளில், நவராத்திரியின் தொடக்க நாள் வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையில் சிரமம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக உள்ளூர் காவல்துறை பிசிசிஐ இடம் முறையிட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, ஐசிசியிடம் அதை தெரிவித்து எச்சரித்திருப்பதாக தெரிகிறது.

Ind vs Pak

இந்து பண்டிகையான நவராத்திரி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், 9 நாட்களிலும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்படுவது குஜராத்தில் மட்டும் தான். அங்குதான் போட்டியும் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருப்பதால், பாதுகாப்பு காரணமாக இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை அக்டோபர் 14-ம் தேதியே நடத்த ஆலோசிப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியிருக்கும் பிசிசிஐ அதிகாரி ஒருவர், “இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடும் பெரிய மோதலை காண பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபத்தை அடைவார்கள் என்பதால், நவராத்திரியன்று பாதுகாப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அதை தவிர்க்கவேண்டும் என்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதற்காக என்ன செய்யவேண்டும் என்று எங்களிடம் உள்ள விருப்பங்களை வைத்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தேதி மாற்றப்பட்டால் இந்தியா - பாகிஸ்தான் அட்டவணையில் என்னென்ன சிக்கல் ஏற்படும்?

ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது, அக்டோபர் 15-ம் தேதிக்கு முன்கூட்டியே அக்டோபர் 14-ஆம் தேதி நடத்தப்பட்டால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அந்த போட்டிக்காக தயாராவதில் சிக்கல்கள் ஏற்படும்.

ind-pak

இந்திய அணியை பொறுத்தவரையில் இந்தியா அக்டோபர் 11-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் விளையாடுகிறது. அதைமுடித்து விட்டு 2 நாட்கள் இடைவெளியிலேயே அகமதாபாத்தில் நடக்கும் 14-ம் தேதி போட்டிக்கு தயாராக வேண்டும். இதனடிப்படையில் பார்த்தால் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு தான் சிரமம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் பாகிஸ்தான் அணி 14-ம் தேதிக்கு முன்னதாக 12ஆம் தேதி ஹைதராபாத்தில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடுகிறது. அந்த போட்டியை முடித்துவிட்டு 14-ம் தேதி போட்டிக்கு தயாராக வெறும் ஒருநாள் இடைவெளியே அவர்களுக்கு கிடைக்கும்.

Babar

இதையெல்லாம் தாண்டி அக்டோபர் 14ஆம் தேதி ஏற்கெனவே இரண்டு போட்டிகள் நடத்தப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது. அக்டோபர் 14-ம் தேதி நடக்கவிருக்கும் அந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பகல் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தானையும், பகல் இரவு ஆட்டத்தில் நியூசிலாந்து-வங்கதேசத்தையும் எதிர்த்து விளையாடுகின்றன. இந்த நிலையில் 3வது போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இறுதி முடிவுக்கு முன் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களையும் சந்திக்கும் பிசிசிஐ!

இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ ஐசிசியை எச்சரித்தாலும், இன்னும் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு, ஜூலை 27ஆம் தேதி உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களையும் பிசிசிஐ சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india pakistan match

இதற்கிடையில் இன்னும் பாகிஸ்தான் அணி அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் போட்டிக்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்துவருகிறது. பாகிஸ்தான் பிரதமர் அமைத்திருக்கும் உயர்மட்டக்குழு ஒன்று இந்தியாவிற்கு வந்து பாதுகாப்பு குறித்த ஆய்வை முடித்த பிறகே அதன் முடிவை பாகிஸ்தான் அறிவிக்கும். இதைத்தாண்டி தற்போது எழுந்திருக்கும் குழப்பத்திற்கு ஐசிசி என்ன முடிவு செய்யும் என்று தெரியவில்லை. விரைவில் இதற்கான முழு அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.