இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய ஆறு புகழ்பெற்ற கிரிக்கெட் நாடுகளின் முன்னாள் சாம்பியன் வீரர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) டி20 தொடர் நடத்தப்பட்டுவருகிறது.
இந்தியாவில் நடந்துவரும் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன் முதலிய முன்னாள் வீரர்கள் அந்தந்த நாடுகளை கேப்டனாக வழிநடத்துகின்றனர்.
15 லீக் போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்படும் இந்த தொடரானது பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கியது.
பரபரப்பாக நடந்துவரும் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஜாக் காலீஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இந்தியா விளையாடியது.
இந்தியா மாஸ்டர்ஸ்க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 85 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
5வது ஓவரை வீசிய இந்திய ஸ்பின்னர் ராகுல் ஷர்மா 5.1, 5.2, 5.3 என மூன்று பந்துகளில் ஹசிம் ஆம்லா, ஜாக் காலீஸ், ருடோல்ஃப் மூன்றுபேரையும் அடுத்தடுத்து வெளியேற்றி சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். உடன் யுவராஜ் சிங்கும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
86 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இந்திய மாஸ்டர்ஸ் அணி 11 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
நாளை நடக்கவிருக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணி இங்கிலாந்து மாஸ்டர்ஸை எதிர்கொள்ளவிருக்கிறது.