இந்தியா மாஸ்டர்ஸ் - இங்கிலாந்து மாஸ்டர்ஸ் x
கிரிக்கெட்

5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா மாஸ்டர்ஸ் வெற்றி!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா மாஸ்டர்ஸ் அணி.

Rishan Vengai

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய ஆறு புகழ்பெற்ற கிரிக்கெட் நாடுகளின் முன்னாள் சாம்பியன் வீரர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) டி20 தொடர் நடத்தப்பட்டுவருகிறது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்

இந்தியாவில் நடந்துவரும் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன் முதலிய முன்னாள் வீரர்கள் அந்தந்த நாடுகளை கேப்டனாக வழிநடத்துகின்றனர்.

15 லீக் போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்படும் இந்த தொடரானது பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கியது.

iml league

முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி, சங்கக்கரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியை 4 ரன்னில் வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி, ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் மூன்றாவது லீக் போட்டியில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் மற்றும் இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடின.

5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்..

நவி மும்பையில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இந்திய மாஸ்டர்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குர்கீரத் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 5 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசிய சச்சின் 34 ரன்னில் வெளியேற, இறுதிவரை ஆட்டமிழமக்கால் ஆடிய குர்கீரத் 35 பந்தில் 63 ரன்கள் அடித்து மிரட்டினார்.

மறுமுனையில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த யுவராஜ் சிங் 14 பந்தில் 27 ரன்கள் அடித்து அசத்த, 11.4 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டிய இந்திய மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது.