bumrah - shardul - nitish kumar - jadeja x
கிரிக்கெட்

பும்ராவுக்கு ஓய்வு? ஜடேஜா நீக்கம்? ஷர்துல் OUT! 3 மாற்றங்கள் செய்யும் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 3 மாற்றங்களை இந்தியா செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்து வெற்றியின் பக்கமிருந்தும், சுமாரான ஃபீல்டிங் மற்றும் பவுலிங் காரணமாக இந்தியா தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து

முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் மகிழ்ச்சியுடன் இருக்கும் இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மாற்றம் செய்யாமல் அதேஅணியை அறிவித்துள்ளது.

நாளை பர்மிங்காமில் தொடங்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் இந்தியா 3 மாற்றங்களை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 ஸ்பின்னர்ஸ்.. பழைய யுக்தியை கையிலெடுக்கும் இந்தியா!

இந்தியாவின் பாரம்பரிய யுக்தியான 2 ஸ்பின்னர்கள் என்ற யுக்தியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கவிருக்கிறது. முதல் டெஸ்ட்டில் ஒரே ஸ்பின்னராக விளையாடிய ஜடேஜா சிறப்பாக பந்துவீசினாலும், பேட்டிங்கில் சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

ஜடேஜா

இந்த சூழலில் அணியில் ஜடேஜா உடன் குல்தீப் யாதவ் இணைக்கப்படவும், அல்லது ஜடேஜா வெளியேற்றப்பட்டு பேட்டிங்கில் ஃபார்மில் இருக்கும் வாசிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் இருவர் விளையாடவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

2 ஸ்பின்னர்கள் விளையாடுவது குறித்து பேசியிருக்கும் இந்தியாவின் துணை பயிற்சியாளர் ரியான் டென், ”2 ஸ்பின்னர்கள் விளையாடுவதில் உறுதியாக இருக்கிறோம். 3 பேரும் சிறப்பாக பந்துவீசுவதால் எந்த இருவர் என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லை. வாசிங்டன் சுந்தர் சிறப்பாக பேட்டிங்கும் செய்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் ரெட்டி..

இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை நிதிஷ் குமார் ரெட்டி பெறுவார் என தெரிகிறது. ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கிலும் பங்காற்றுவார் என்று அணியில் எடுத்த இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், அது பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்து எடுக்கவில்லை.

இந்த சூழலில் ஆஸ்திரேலியா மண்ணில் சதம்விளாசிய ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வீரரான நிதிஷ்குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அணியில் இடம்பெறுவார் என தெரிகிறது.

நிதிஷ்குமார் ரெட்டி

இதுகுறித்து பேசியிருந்த துணை பயிற்சியாளர், “முதல் டெஸ்ட் போட்டியில் அணியின் பேலன்ஸை கருத்தில் கொண்டு ஒரு பவுலிங் ஆல்ரவுண்டருடன் செல்ல திட்டமிட்டிருந்தோம். அந்தவகையில் ஷர்துல் தான் முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது அணியின் சரியான கலவையை கொண்டுவர திட்டமிட்டுவருகிறோம். அந்தவகையில் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டரை இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம். தற்போது எங்களுடைய பிரைம் பேட்டிங் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி” என்று பேசியுள்ளார்.

பும்ராவுக்கு ஓய்வு..

முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பும்ரா 3 போட்டிகளில் தான் விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 2வது போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. அப்படி ஓய்வை பெற்றால் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

bumrah

பும்ரா குறித்து பேசிய துணை பயிற்சியாளர், “பும்ரா 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகவே இருக்கிறார், ஆனால் அவருக்கான பணிச்சுமை கருதி என்ன முடிவை எடுப்போம் என்பது இறுதியில் தான் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.