2026 யு19 உலகக் கோப்பை அரையிறுதியில், கேரளா வீரர் ஆரோன் ஜார்ஜ் 115 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆப்கானிஸ்தான் 310 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 311 ரன்களை எளிதில் அடித்து 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இது யு19 உலகக்கோப்பை அரையிறுதியில் அதிகபட்ச ரன் சேஸிங் ஆகும்.
ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் U19 உலகக் கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப்போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றன.
இரண்டு பிரிவுகளாக சூப்பர் 6 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா முதலிய 4 U19 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இதில், நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆஸ்திரேலியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 310 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்த பைசல் ஷினோசாடா 110 ரன்களும், உசைருல்லா நியாசி 101 ரன்களும் அடித்து அசத்தினர்.
311 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 33 பந்தில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உட்பட 68 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 62 ரன்கள் அடித்து வெளியேற, இறுதிவரை களத்தில் நின்று 15 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்த கேரளாவைச் சேர்ந்த ஆரோன் ஜார்ஜ் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
இதுவரை யு19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் சேஸிங்கை நிகழ்த்திய இந்திய அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.