நியூசிலாந்து மண்ணில் நடக்கவிருக்கும் இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் விளையாடும் இந்தியா ஏ அணியை மெய்ன் அணி என்றுதான் சொல்லவேண்டும். இந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், அன்ஷுல் கம்போஜ், ஆகிப் நபி, ஆகாஷ் தீப், முகேஷ் சவுத்ரி என அனைவரும் விளையாடுகின்றனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஆடுகளம் முழுக்க பச்சை நிறத்தில் புற்கள் நிறைந்ததாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணில் வெறும் ஃபிளாட் பிட்ச்களிலேயே ஆடி பழக்கப்பட்ட இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய மெய்ன் அணியில் இடம்பிடித்துள்ள கேஎல் ராகுல், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் என அனைவரும் 0 ரன்னில் நடையை கட்டினர்.
அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 32 ரன்களும், யஷ் ரதோட் 44 ரன்களும், ஜெய்ஸ்வால் 17 ரன்களும் அடித்தனர். இதே ஆடுகளம் இந்திய அணிக்கு வழங்கப்பட்டால் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா என்னசெய்யும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.