கம்பீர்-தோனி / சாஹரன் - சச்சின்
கம்பீர்-தோனி / சாஹரன் - சச்சின் ICC
கிரிக்கெட்

U19 WC: தோனி-கம்பீர் ஆட்டத்தை கண்முன் காட்டிய சச்சின் - சாஹரன்! SAவை வீழ்த்தி Final சென்ற இந்தியா!

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த 2024 யு19 உலகக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 அணிகள் உலகக்கோப்பைக்காக மோதிய மோதலில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றன.

இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான முதல் அரையிறுதிப்போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றுகளில் ஒரு போட்டியில் தோல்வியே சந்திக்கவில்லை என்றாலும், தென்னாப்பிரிக்கா அணி சொந்த மண்ணை பயன்படுத்தி சிறப்பாகவே செயல்பட்டுவந்தது.

இந்நிலையில் முதல் அரையிறுதிப்போட்டியானது விறுவிறுப்பான ஒரு போட்டியாகவே தொடங்கப்பட்டது.

டாஸ் வென்று அதிர்ச்சி முடிவை எடுத்த இந்தியா!

நடந்துமுடிந்த லீக் சுற்றுகள் மற்றும் சூப்பர் 6 சுற்றுகள் என விளையாடிய 5 போட்டிகளில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை மட்டுமே செய்திருந்தது. ஆனால் அரையிறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, இந்த தொடரில் முதல்முறையாக பந்துவீச்சை தேர்வுசெய்து எல்லோரையும் ஆச்சரியத்திற்குள் தள்ளியது.

ind vs sa U19 WC

ஒரு அணி தொடர்ச்சியாக முதலில் பேட்டிங்செய்து வெற்றியே சந்தித்திருந்த நிலையில், இந்த தீடீர் முடிவு சரியா இல்லையா என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 244 ரன்களில் கட்டுப்படுத்தி எடுத்த முடிவில் திடமாக நின்றது.

32/4 என தடுமாறிய இந்தியா! 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட சச்சின் - உதய்!

245 ரன்கள் என்ற டிரிக்கியான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங்கை கோல்டன் டக்கில் வெளியேற்றி வேகப்பந்துவீச்சாளர் குவேனா மபாகா அதிர்ச்சி கொடுத்தார். உடன் கடந்த போட்டிகளில் சதமடித்து அசத்திய வீரர்களான முஷீர் கான் மற்றும் குல்கர்னி இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கி வெளியேற்றிய டிரிஸ்டன் லஸ் கலக்கிப்போட்டார். தொடர்ந்து வந்த மோலியாவும் 4 ரன்களுக்கு நடையை கட்ட 32 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறியது.

Tristan Luus

டாப் 5 வீரர்களில் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தோன்றியது. ஆனால் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் உதய் சாஹரன் மற்றும் சச்சின் தாஸ் இருவரும் ஒரு நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபக்கம் கேப்டன் நிலைத்து நிற்க, மறுமுனையில் கிடைத்த பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டிய சச்சின் தாஸ் ஒரு க்ளாசிக்கல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

Uday Saharan and Sachin Dhas

ஒருபுறம் கேப்டன் உதய் 50 ஸ்டிரைக்ரேட்டில் நின்று விளையாட, மறுபுறம் 100 ஸ்டிரைக்ரேட்டில் பட்டையை கிளப்பிய சச்சின் சிக்சர் பவுண்டரிகள் என விரட்ட இந்தக்கூட்டணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்த, 6வது விக்கெட்டுக்கு 171 சேர்த்த இந்த கூட்டணியை சச்சினை 96 ரன்களில் வெளியேற்றி முடித்துவைத்தார் மபாகா. சதமடிப்பார் என்று நினைத்த சச்சின் வெளியேறிய போது ஆட்டம் சூடுபிடித்தது.

இறுதிநேரத்தில் 2 விக். இழந்த இந்தியா! சிக்சர் அடித்து காப்பாற்றிய லிம்பனி!

சச்சின் தாஸ் முக்கியமான தருணத்தில் வெளியேற அழுத்தம் மொத்தமும் கேப்டன் உதய் சாஹரன் மீது அதிகமானது. படபடப்பான நேரத்தில் பெரிய ஷாட்களுக்கு செல்லாத உதய் சாஹரன் ரன்களை ஓடியே எடுக்க முடிவுசெய்தார். ஆனால் 19 பந்துகளுக்கு 19 ரன்கள் தேவை என இருந்த போது விக்கெட் கீப்பர் அவனிஷ் அவுட்டாகி வெளியேற தென்னாப்பிரிக்கா அணி ஆட்டத்திற்குள் வந்தது. அடுத்துவந்த முருகன் அபிஷேக் பிரஸ்ஸரில் ரன்னவுட்டாகி வெளியேற, இந்திய அணி அழுத்தத்தை ஏற்றியது தென்னாப்பிரிக்கா.

maphaka

15 ரன்னுக்கு 18 ரன்கள் என இந்தியா தடுமாற களத்திற்கு வந்த முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய ராஜ் லிம்பனி “அப்பாடா” என ஒரு பெருமூச்சை ரசிகர்களுக்கு விடவைத்தார். பந்துகளுக்கு கீழ் ரன்கள் வர களத்தில் நீடித்திருந்த கேப்டன் உதய் சாஹரன் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை களத்திலிருந்த கேப்டன் உதய் சாஹர் 81 ரன்கள் அடித்து ஒரு கேப்டன் நாக்கை விளையாடினார்.

Uday Saharan

இந்த அரையிறுது வெற்றி மூலம் தொடர்ச்சியாக 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியா அசத்தியுள்ளது. ஆட்டநாயகன் விருது உதய் சாஹரனுக்கு வழங்கப்பட்டது. சச்சின் தாஸின் 96 மற்றும் கேப்டன் உதய் சாஹரனின் 81 ரன்கள் ஆட்டமானது, 2011 உலகக்கோப்பையில் கௌதம் கம்பீரின் 97 ரன்கள் மற்றும் எம் எஸ் தோனியின் 91 ரன்கள் ஆட்டத்தை நினைவுபடுத்தியது. 5 முறை யு19 உலக்கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணி, 6வது முறையாக வெல்லும் தீவிரத்தில் இருக்கிறது.

கம்பீர்-தோனி

நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.