சவாலான தொடரில், இந்தியா 209 ரன்னில் சுருண்டது. கேப்டன் சுப்மன் கில் இல்லாததால் பேட்டிங் வரிசை தடுமாறியது. நியூசிலாந்து 83 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தொடரை வெல்ல இந்தியா மற்றும் சமன்செய்ய நியூசிலாந்து அணிகள் கடும் போட்டியில் மோதுகின்றன.
2027 உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து மண்ணில் ஒரு சவாலான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது இந்திய அணி. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெறவிருக்கிறது என்பதால் இந்தியாவிற்கு இந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் நல்ல தயாரிப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
தொடர் சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் முதலிரண்டு போட்டிகளையும் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்று தாங்கள் தான் நம்பர் 1 அணி என நிரூபித்தது. ஆனால் சொந்தமண்ணில் மீண்டெழுந்த நியூசிலாந்து அணி 4வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது. 5வது போட்டி இன்று நடக்கும் நிலையில், தொடரை வெல்வதற்காக இந்தியாவும், சமன்செய்வதற்காக நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 209 ரன்களிலேயே சுருண்டது. கேப்டன் சுப்மன் கில் இல்லாததால் இந்தியாவின் திடமான பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டுள்ளது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் 7, 5 என ஓரிலக்க ரன்களில் வெளியேற, கேப்டன் சுப்மன் கில்லுக்கு பதிலாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 18 ரன்னில் நடையை கட்டினார்.
தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 22 ரன்களுக்கு நடையை கட்ட, மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியை சரிவிலிருந்து மீட்க போராடினாலும் இஷான் கிஷன் மற்றும் அக்சர் பட்டேல் தலா 46 ரன்கள் அடித்து வெளியேறினர்.
அடுத்தடுத்து வந்த வீரர்களும் விரைவாகவே வெளியேற இந்தியா 209 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது. கடைசியாக வந்து 1 சிக்சர் 1 பவுண்டரி என அடித்த சிராஜும், 2 சிக்சர்களை அடித்த அர்ஷ்தீப் சிங்கும் இந்தியா 200 ரன்களை கடக்க உதவினர்.
210 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் நியூசிலாந்து அணி 83 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.