2025 மகளிர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து 4வது அணியாக அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்திய அணி..
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பரபரப்பாக நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் நாக் அவுட் போட்டிகளை எட்டியுள்ள நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா 3 அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின. கடைசி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே போட்டி நிலவியது.
இந்தசூழலில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற முடிவை தீர்மானிக்கும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின..
நவி மும்பையில் தொடங்கிய போட்டியில் டாஸை இழந்த இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மந்தனா மற்றும் பிரதிகா ஜோடி அபாரமாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். பிரதிகா 122 ரன்னும், மந்தனா 109 ரன்னும் அடிக்க, அடுத்து களத்திற்கு வந்த ஜெமிமா 38 பந்தில் அரைசதமடித்து மிரட்டினார். முடிவில் 49 ஓவரில் 340 ரன்களை குவித்தது இந்திய அணி..
மழை காரணமாக DLS முறைப்படி நியூசிலாந்துக்கு 44 ஓவரில் 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சவாலான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்தால் 271 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.. முடிவில் 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோல்வியை தழுவியது..
இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்ததால் அவர்களுடைய ரன்ரேட் அதிகமானது, அதேபோல அரையிறுதி போட்டியாளரான நியூசிலாந்தின் ரன்ரேட் மிகவும் குறைந்தது. இதனால் அடுத்த லீக் போட்டிக்கு செல்லவேண்டிய கட்டாயம் இல்லாததால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியது. நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தொடரிலிருந்து வெளியேறுகின்றன. 26-ம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா..