ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப் பிரிவில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்தப் பிரிவில், நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆரம்பம் முதலே அசத்தினார். மறுபுறம் சுப்மன் கில்லும் துணையாக நின்றார். அதேபோல், பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவும் சூழ்நிலையைப் புரிந்து ஆடினார். அபிஷேக் சர்மா (75 ரன்கள்), சுப்மன் கில் (29 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (38 ரன்கள்) ஆகியோரின் சிறந்த பங்களிப்பால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷயீப் ஹாசன் 69 ரன்கள் எடுத்தபோதும் மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால், அந்த அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இத்தொடரில் இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. அதேநேரத்தில் இத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.