ind a x page
கிரிக்கெட்

இந்தியா செய்த மிகப்பெரிய தவறு.. பேட் பிடிக்காமல் 10 ரன்கள்.. அதிர்ஷ்டத்தால் இலங்கை வெற்றி!

கிரிக்கெட் விதிகளின்படி, பேட்டர்கள் வேண்டுமென்றோ அல்லது அஜாக்கிரதையாகவோ பிட்ச்சின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஓடக்கூடாது. இத்தகைய விதிமீறலுக்கு நடுவர் முதலில் எச்சரிக்கை விடுப்பார்.

Prakash J

கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது. அப்படியிருக்கையில், இலங்கை அணி பேட் பிடிப்பதற்கு முன்பாகவே, அவ்வணிக்கு இந்திய அணி 10 ரன்களை இலவசமாக வழங்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில், இத்தொடரின் 4ஆவது போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ind a

பின்னர் ஆடிய இலங்கை அணியும் போராடி 9 விக்கெட் இழப்புக்கு ஆட்டத்தை டிரா செய்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டு இலங்கை அணி வெற்றிபெற்றது. முன்னதாக, இலங்கை அணி தனது இன்னிங்ஸைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, அவ்வணிக்கு நடுவரால் 10 ரன்கள் வழங்கப்பட்டது. இந்தியா, தனது இன்னிங்ஸின்போது ஆடுகளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் மீண்டும் மீண்டும் ஓடியதற்காக பெனால்டியாக இந்த ரன்கள் வழங்கப்பட்டன.

கிரிக்கெட் விதிகளின்படி, பேட்டர்கள் வேண்டுமென்றோ அல்லது அஜாக்கிரதையாகவோ பிட்ச்சின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஓடக்கூடாது. இத்தகைய விதிமீறலுக்கு நடுவர் முதலில் எச்சரிக்கை விடுப்பார். அதன்பிறகும் பேட்டிங் செய்யும் அணி இதே தவறைத் தொடர்ந்தால், ஒவ்வொரு முறைக்கும் ஐந்து ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும். ஷூக்களின் ஸ்பைக்குகள் ஆடுகளத்தின் தன்மையை சேதப்படுத்தி, கரடுமுரடான பகுதிகளை உருவாக்கக்கூடும் என்பதால் இந்த விதிமுறை உள்ளது. இந்த நிலையில்தான், இந்திய அணி தனது 33ஆவது ஓவரில் விளையாடியபோது ஆல்-ரவுண்டர் அனுகுல் ராய், ஆடுகளத்தின் நடுவே ஓடியது கண்டறியப்பட்டு, அவருக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பிறகு இரண்டு ஓவர்கள் கழித்து, 35ஆவது ஓவரில் மற்றொரு இந்திய வீரரான விப்ராஜ் நிகாமும் அதே தவறை மீண்டும் செய்தார். இதையடுத்து நடுவர் அவருக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட எச்சரிக்கையை வழங்கினார். தொடர்ந்து, 37ஆவது ஓவரிலும் நிகாம் மீண்டும் அதே தவறைச் செய்ததால், மேலும் ஐந்து ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது. இதையடுத்து இலங்கை அணி, ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் 10 ரன்களைப் பெற்றது. இந்திய அணி மட்டும் இந்தப் பெரிய தவறை மீண்டும் மீண்டும் செய்யாமல் இருந்திருந்தால் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும். இது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதுடன் இந்த விவகாரம் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.