நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று உள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களம் புகுந்தனர்.
இதில் சாம்சன் 10 ரன்களில் நடையைக் கட்ட, அதற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் கண்ட இஷான் கிஷானும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால், யார் போனால் நமக்கென்ன? நம் வேலையை நாம் பார்ப்போம் என்கிற ரீதியில் ஆரம்பம் முதலே மட்டையைச் சுழற்றியபடி இருந்தார். இதனால் இந்தியாவின் ரன் உயர்ந்துகொண்டே இருந்தது. தவிர, அவரும் 22 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவர் சதமடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 84 ரன்களில் அவுட்டானார். இதில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளும் அடக்கம். இதற்கிடையே கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங்கால் இந்திய அணி 200 ரன்களை தாண்டியது. குறிப்பாக, டேரியல் மிட்செலின் கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி ரிங்கு சிங் அட்டகாசப்படுத்தினார். இதனால் நிலைகுலைந்த மிட்செல், அடுத்த பந்தை வைடாக வீசி ரிங்குவை வெறுப்பேற்றினார். என்றாலும் அதற்கடுத்த பந்துகளில் இரண்டு பவுண்டரி அடித்தார். இதன்மூலம் அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் கிடைத்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. இறுதிவரை களத்தில் நின்ற ரிங்கு சிங், 20 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்தார்.
பின்னர், 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. எனினும் கிளென் பிளிப்ஸ் (78) மற்றும் மார்க் சாப்மேன் (39) ஆகியோரின் ஆட்டத்தால் சற்றே நிமிர்ந்தது. அதற்குப் பின் வந்த டேரியல் மிட்செல்லும் (28) அதிரடி காட்டினார். சாட்னரும் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்தார். எனினும், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களே எடுத்தது. இதையடுத்து, அவ்வணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.