சொந்த மண்ணில் அடுத்ததாக நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை.
அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஷமி தனது உடல் தகுதியை நிரூபித்தது மட்டுமல்லாமல், ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மூன்று ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் அள்ளினார். இதன்மூலம் தேர்வுக் குழுவினரைத் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தச் சூழலில் தற்போது, சொந்த மண்ணில் அடுத்ததாக நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், இந்திய அணியிலிருந்து முகமது ஷமி முழுவதுமாக ஓரங்கட்டப்படுகிறார் எனப் பேச்சு எழுந்துள்ளது.
முன்னதாக, முகமது ஷமியை அணியில் எடுக்காதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”முகமது ஷமி இங்கு இருந்தால் பதில் அளித்து இருப்பேன். முழு உடல் தகுதியுடன் இருந்தால், ஷமியை போன்ற சிறந்த வீரரை ஏன் எடுக்காமல் இருக்கப் போகிறோம். கடந்த 6-8 மாதங்களாக அவருடன், நான் நிறைய முறை கலந்துரையாடி இருக்கிறேன். அதில் அவர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்பது தெரியவந்தது. இதனால்தான் அவர் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
ஆனால் இதுதொடர்பாக எதிர்வினையாற்றிய முகமது ஷமி, “தாம் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன். ரஞ்சிக் கோப்பையில் விளையாடி அதை நிரூபித்து விட்டேன். இன்னும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அதைப் பற்றி எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்திருந்தார். அகர்கருக்கும் ஷமிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதே தேர்வு விஷயத்தில் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சர்பராஸ் கானும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்பராஸ் கான் விஷயத்தில் அகர்கரும் கம்பீரும் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக ஏற்கெனவே புகார் வாசிக்கப்படுகிறது. தற்போது ஷமி விஷயத்திலும் அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இவ்விவகாரம் குறித்துப் பேசிய ஷமியின் தனிப்பட்ட பயிற்சியாளர் முகமது பத்ருதீன், இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர், “தேர்வாளர்கள் தற்போது ஷமியை வேண்டுமென்றே புறக்கணித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அவர் தகுதியற்றவர் அல்ல. அவர் தகுதியற்றவர் என்று நான் நினைக்கவில்லை. தேர்வுக்குழுவினர் அவரை கண்டும் காணாமல் இருக்கிறார்கள், அவ்வளவுதான். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதை அவர்களால் மட்டுமே சொல்ல முடியும். அவர்கள் இப்போதைக்கு அவரைத் தேர்வு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். என் பார்வையில் அது முற்றிலும் தவறு. நீங்கள் ஒரு டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுக்கும்போது, அது ரஞ்சி டிராபியின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் டி20 அளவீடுகளைப் பயன்படுத்தி டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், அது சரியல்ல. ரஞ்சியில் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்து, அங்கிருந்து தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இங்கே, முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர்களுக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பது ஏற்கெனவே தெரியும். மேலும் அவர்கள் அந்தப் பட்டியலில் ஒட்டிக்கொள்கிறார்கள். எனவே செயல்திறன் அல்லது உடற்தகுதி பற்றிய இந்தப் பேச்சு எல்லாம் ஒரு சாக்குப்போக்கு. அவர் தகுதியற்றவர் அல்லது போட்டிப் பயிற்சி தேவை என்று சொல்வதில் உண்மையல்ல. யார் விளையாட விரும்புகிறார்கள், யார் விளையாட விரும்பவில்லை என்பது குறித்து அவர்களிடம் ஏற்கெனவே ஒரு திட்டம் உள்ளது.
உண்மையில், அவர் மீண்டும் வருவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரது ஃபார்ம் இருந்தபோதிலும் நீங்கள் இப்போது அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், ’செயல்திறனின் அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்கிறோம்’ போன்ற விஷயங்களைச் சொல்வதை நிறுத்துங்கள் - ஏனெனில் அது தெளிவாக உண்மையல்ல. என் பார்வையில், அவர் மீண்டும் வருவதற்கு 100 சதவீதம் தகுதியானவர், மேலும், இந்தியாவிற்கு, குறிப்பாக உலகக் கோப்பையில் இவ்வளவு செய்த ஒரு நபரை நீங்கள் புறக்கணிக்க முடியாது. ஒருவர் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை எதிர்கொள்ளும்போது, கிரிக்கெட்டில் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் கூட அந்த நபர் மிகவும் வலிமையானவராக மாறுகிறார். ஷமிக்கும் அதுதான் நடந்தது. அவர் நிறைய எதிர்கொண்டார், பல கடினமான காலங்களைக் கடந்து வந்துள்ளார், அது அவரை மனரீதியாக கடினமாக்கியுள்ளது. நீங்கள் ஒரு சர்வதேச வீரராக இருக்கும்போது அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் உடைந்து போக முடியாது. எந்த சூழ்நிலையிலும் உயர்ந்து நிற்பவர்களே சிறந்த வீரர்கள். அவர், 25–28 வயதில் பயிற்சி பெற்ற விதம், இன்றும் அதே வழியில் பயிற்சி செய்து வருகிறார். உண்மையில், அவரது பணிச்சுமை வயதுக்கு ஏற்ப அதிகரித்துள்ளது. கொஞ்சமும் குறையவில்லை. பெரும்பாலான வீரர்கள் தங்கள் பணிச்சுமையைக் குறைக்கத் தொடங்கினாலும், அவர் இன்னும் அதிகமாகச் செய்கிறார். அப்படிப்பட்ட ஒரு வீரரின் உடற்தகுதியை சோதிக்க வேண்டிய அவசியமில்லை” என் இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் காட்டமாக விமர்சித்துள்ளார்.