yashasvi jaiswal, rohit sharma x page
கிரிக்கெட்

IND vs AUS ODI | நாளைய போட்டியில் நீக்கப்படுகிறாரா ரோகித் சர்மா..? களமிறங்கும் ஜெய்ஸ்வால்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடைபெறப் போகும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ‘ஹிட் மேன்’ரோகித் சர்மா ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடைபெறப் போகும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ‘ஹிட் மேன்’ரோகித் சர்மா ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதற்கட்டமாக 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பெர்த்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே, இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நாளை நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடரில் சமநிலை பெற அந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதற்கிடையே, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கிய முன்னாள் கேப்டன்களும், மூத்த வீரர்களுமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர். என்றாலும் இருவரும் முதல் போட்டியில் ஏமாற்றம் அளித்தனர். இந்த நிலையில், நாளை நடைபெறப் போகும் இரண்டாவது போட்டியில் ‘ஹிட் மேன்’ரோகித் சர்மா ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய வலைப்பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர். அப்போது தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகிய இருவரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஜெய்ஸ்வால், ரோஹித்தின் நீண்டகால மாற்றாகவும் கருதப்படுவதால், அவருக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஜெய்ஸ்வால் ஒருவேளை அணியில் களமிறக்கப்பட்டால், அவர் தொடக்க வீரராகத்தான் களமிறக்கப்படுவார். அப்படி இருக்கும்பட்சத்தில் கில் கேப்டன் என்பதால் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. இதனால் ரோகித் சர்மாவையே நீக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

rohit sharma

முன்னதாக, ரோகித் சர்மா கடந்த போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும், இதுகுறித்து யாரும் உறுதியாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், நாளை போட்டி தொடங்குவதற்கு முன்பே விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியாகும். அப்போது ரோகித்திற்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பது தெரிந்துவிடும். இதற்கு முன்பு ஒருநாள் கேப்டனாகப் பதவியை ரோகித் சர்மா, தொடர்ந்த நிலையில் அதற்கும் ஆப்பு வைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.