நியூசிலாந்திடம் தொடரை இழந்த இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான 5 முக்கியமான காரணங்களை இங்கே பார்க்கலாம்.
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதிலும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரை இழந்திருப்பது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்தூரில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 137 ரன்களிலும் கிளென் பிளிப்ஸ் 106 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கடுமையான இலக்குடன் ஆடிய இந்திய அணி, 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி, 41 ரன்களில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் தனி ஒருவனாக விராட் கோலி போராடி சதமடித்தும் எந்தப் பலனுமில்லை. அவருடைய முயற்சிகள் வீண் போயின. இந்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான 5 முக்கியமான காரணங்களை இங்கே பார்க்கலாம்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, இந்தூர் மைதானம் பேட்டிங்கிற்கு உகந்தது எனத் தெரிந்தும் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. எனினும், 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை இந்திய அணி கட்டுப்படுத்தியது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரியல் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டத்தையே மாற்றினர். இந்த ஜோடி 219 ரன்கள் குவித்து இமாலய ஸ்கோருக்கு வித்திட்டது. இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. அதிலும், மிடில் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது. இதுவே தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் மிட்செல் - பிலிப்ஸ் அதிரடி காட்டியபோது, பந்துவீச்சாளர்களை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் கேப்டன் சுப்மன் கில் திணறினார். மேலும் அவருடைய அனுபவமின்மை இந்த போட்டியில் வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக, குல்தீப் யாதவை மிகத் தாமதமாகவே பந்துவீச அழைத்தார். அதற்குள் பேட்டர்கள் நன்கு செட்டிலாகி இருந்ததால், குல்தீப் ஓவரையும் பறக்கவிட்டனர். இதுதவிர, ஃபீல்டிங்கைக் கட்டமைப்பதிலும் கில் கோட்டைவிட்டார். முக்கியக் கட்டங்களில் கேட்சுகளைத் தவறவிட்டதும், மிஸ் பீல்டிங் செய்ததும் நியூசிலாந்து அணிக்கு கூடுதல் ரன்களை வழங்க காரணமாக அமைந்தது.
இந்தூர் போன்ற பேட்டிங் பிட்சில் 338 ரன்களை சேஸ் செய்வது என்பது கடினமல்ல. ஆனால் அதற்கு வலுவான தொடக்கம் தேவை. ரோகித் சர்மா (11), சுப்மன் கில் (23), ஸ்ரேயாஸ் ஐயர் (3), கே.எல். ராகுல் (1) என அணியின் முக்கிய வீரர்கள் 71 ரன்களுக்குள் நடையைக் கட்டினர். இதனால் ஆரம்பத்திலேயே இந்திய அணி 4 முக்கிய விக்கெட்களை இழந்து தத்தளித்தது. இதுபோன்ற கடுமையான இலக்கை நோக்கி விளையாடும்போது தொடக்க வீரர்களில் யாராவது ஒருவர் நின்று ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், நேற்றையப் போட்டியில் இது நடைபெறவில்லை. ஆக, இதுவும் இந்திய அணிக்கு தோல்வியுறுவதற்கு ஒரு காரணமாகிவிட்டது.
நேற்றைய போட்டியில் கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் விராட் கோலி மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது. ஆனால், அவருக்குத் துணையாக எந்த பேட்டர்களும் இல்லாததால் அவர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டார். அவர், தனி ஆளாகப் போராடி 124 ரன்கள் குவித்தார். ஆனால் அவருக்குத் துணையாக நின்று பார்ட்னர்ஷிப் அமைக்க, முன்வரிசை மற்றும் நடுவரிசை பேட்டர்கள் யாரும் இல்லை. இளம் வீரர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் போராடியபோதும் பயனில்லை. தவிர, ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பினிஷர் இல்லாத குறையும் அணியில் தென்பட்டது.
உண்மையில், நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாகவே செயல்பட்டது. முதல் இன்னிங்ஸில் தொடக்க விக்கெட்களை வீழ்ந்தபோதும், மத்தியில் மிட்செல், பிளிப்ஸின் கூட்டணி நன்கு கைகொடுத்தது. அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் விக்கெட்களை தொடக்கத்திலேயே பிரித்து நெருக்கடி கொடுத்தனர். தவிர, முக்கியமான தருணங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை உண்டாக்கினர். அதேபோல், அவர்களுடைய ஃபீல்டிங் கட்டமைப்பும் சிறப்பாக இருந்தது.