Iftikhar - kuldeep
Iftikhar - kuldeep Twitter
கிரிக்கெட்

சுழலில் மேஜிக் செய்த குல்தீப்.. பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணி! 191 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்!

Rishan Vengai

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சிறப்பாக தொடங்கிய பாகிஸ்தான்! அரைசதம் அடித்த பாபர்!

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதல் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் சற்றே தடுமாறினர். 8 ஆவது ஓவரில் தான் முகமது சிராஜ் முதல் விக்கெட்டை சாய்த்தார். தொடர்ந்து ஒரு அற்புதமான அவுட்ஸ்விங் டெலிவரியில் இரண்டாவது விக்கெட்டை சாய்த்தார் ஹர்திக் பாண்டியா.

பாபர்

இதனையடுத்து பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தது. இந்த ஜோடி நிலைத்து நின்று ரன்களை சீரான வேகத்தில் சேர்த்தது. அரைசதம் அடித்த பாபர் அசாமை ஒரு கட்டர் டெலிவரியில் அசத்தலாக போல்டாக்கி வெளியேற்றினார் சிராஜ். தொடர்ந்து ஸ்டிராங்காக ஆடிவந்த பாகிஸ்தான் ஆட்டத்தில் ஒரு கேம் சேன்ஜிங் மொமண்ட்டை எடுத்துவந்தார் சிராஜ்.

ஒய்டு போன பந்து எப்படி போல்டாச்சு!

இந்த நேரத்தில் தான் சரியாக 33ஆவது ஓவரை வீச வந்தார் குல்தீப் யாதவ். இரண்டாவது பந்தில் சவுத் சாஹில் விக்கெட்டை சாய்த்த அவர், கடைசி பந்தில் மேஜிக் டெலிவரியை வீசி இஃப்திகார் அகமது விக்கெட்டை சாய்த்தார். இதில் சுவாரசியம் என்னவென்றால் பந்து எப்படி டர்ன் ஆனது என்றே இஃப்திகாருக்கு தெரியவில்லை.

பேட்ஸ்மேனுக்கு நேராக சற்று லெக் சைடில் தரையில் பட்டு எழும்பிய பந்து சுழன்று பேட்ஸ்மேனுக்கு பின்னால் சென்றது. பேட்ஸ்மேனோ அது வைய்டு என்று நினைத்து நின்று கொண்டிருந்தார். ஆனால், ஹூக்ளி பந்தானது சுழன்று சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.

அடுத்த ஓவரிலேயே பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் விளையாடி வந்த ரிஸ்வானை 49 ரன்களில் க்ளின் போல்ட் ஆக்கினார் பும்ரா. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ அழுத்தம் அதிகமான நேரத்தில் சரியாக பும்ராவை களமிறக்கிய கேப்டன் ரோகித் சர்மா, சிறந்த கேப்டன்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து ஷதாப் கானை பும்ரா போல்டாக்கி வெளியேற்றினார். 40, 41 ஆவது ஓவர்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 42.5 ஆவது ஓவரில் ஜடேஜா மீண்டும் ஒரு விக்கெட் வீழ்த்த 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான் அணி.

இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப், ஹர்திக் ஆகியோ தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். இதில், பும்ரா 7 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 17 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதேபோல் குல்தீப் 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஜடேஜாவும் 9.5 ஓவர்களில் 38 ரன்களை மட்டும் வழங்கினார். ஷர்துல் இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.