Ind vs Pak
Ind vs Pak Twitter
கிரிக்கெட்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் எப்போது, எங்கே?

சங்கீதா

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு 13-வது ஒருநாள் உலகக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19-ம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ICC 50 over world cup schedule

அதன்படி, வருகிற அக்டோபர் 5-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் உலகக் கோப்பையின் முதல் போட்டி துவங்குகிறது. இந்தப் போட்டியில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் 5 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

பாகிஸ்தானின் 2 போட்டிகள் உட்பட மொத்தம் 5 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன. ஏற்கனவே வெளியான தகவலின்படி, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியாவிற்கான போட்டி அட்டவணை:

அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா - சென்னை

அக்டோபர் 11: இந்தியா vs ஆப்கானிஸ்தான் - டெல்லி

அக்டோபர் 15: இந்தியா vs பாகிஸ்தான் - அகமதாபாத்

அக்டோபர் 19: இந்தியா vs வங்கதேசம் - புனே

அக்டோபர் 22: இந்தியா vs நியூசிலாந்து - தர்மசாலா

அக்டோபர் 29: இந்தியா vs இங்கிலாந்து - லக்னோ

நவம்பர் 2: இந்தியா vs குவாலிஃபையர் 2 - மும்பை

நவம்பர் 5: இந்தியா vs தென்னாப்பிரிக்கா - கொல்கத்தா

நவம்பர் 11: இந்தியா vs குவாலிஃபையர் 1 - பெங்களூரு

அகமதாபாத், சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, தர்மசாலா, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, புனே என மொத்தம் 10 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் முதல் அரையிறுதிப் போட்டியும், நவம்பர் 16-ம் தேதி இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது. நவம்பர் 19-ம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கனவே, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 7 அணிகள் தகுதிப்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 8-வது அணியாக நேரடியாக தகுதிப் பெற்றுள்ளது. சமீபத்தில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி மழைக் காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அயர்லாந்து அணி ஐசிசியின் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்ததை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெற்றது.

மீதம் உள்ள இரண்டு இடங்களுக்கான குவாலிஃபயர் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் 9-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள இந்தப் போட்டியில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும். உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறவுள்ளன. இதில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற 9 அணிகளுடன் மோதவுள்ளன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். இதில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. லீக் சுற்றுகள், நாக் அவுட், அரையிறுதி, இறுதிப் போட்டி உள்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளது.