மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கான தகுதியைப் பொறுத்தவரை, ஓர் அணி மற்ற 7 அணிகளுடன் ஒருமுறை மோதும், இதில் அதிக வெற்றிகள் பெற்று டாப் 4-ல் இடம்பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும், 3வது இடத்தில் தென்னாப்பிரிக்காவும், 4வது இடத்தில் இந்தியாவும் நீடிக்கின்றன. இந்த நிலையில், நேற்று இந்திய அணி 20வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஹெதர் நைட் 109 ரன்களும், எமி ஜோன்ஸ் 56 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 4 விக்கெட்களும், சார்னி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். பின்னர், 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதன்படி தொடக்க வீராங்கனை ராவல் 6 ரன்களில் ஏமாற்றியபோதும் துணை கேப்டனும் மற்றொரு தொடக்க பேட்டருமான ஸ்மிருதி மந்தனா நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
அவருக்குத் துணையாக டியோல் 24 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 70 ரன்களும், தீப்தி சர்மா 50 ரன்களும் எடுத்தனர். இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் சிறப்பாக விளையாண்ட மந்தனா, எதிர்பாராதவிதமாக 88 ரன்னில் அவுட்டானார். இதனால் அணியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. என்றாலும் அதன்பிறகு களமிறங்கிய அமோஞ்த் கவுர், சினே ரானா வெற்றிக்காகக் கடைசிவரை போராடினர். எனினும், இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரில் வெறும் 9 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.