2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியே இல்லாமல் ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது இங்கிலாந்து மகளிர் அணி.
8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 3 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.
இந்தசூழலில் இங்கிலாந்து அணி தங்களுடைய 3வது லீக் போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக பந்துவீசிய இலங்கை பவுலர்கள் இங்கிலாந்து அணியை நிலைகுலைய வைத்தாலும், ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய இங்கிலாந்து கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 117 ரன்கள் குவித்து அசத்தினார்.
50 ஓவரில் 253 ரன்களை இங்கிலாந்து அடிக்க, இலங்கை அணி வெற்றிக்காக போராடியது. ஆனால் இங்கிலாந்து ஸ்பின்னர் சோஃபி எக்லெஸ்டோன் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்த 164 ரன்களுக்கே சுருண்டது இலங்கை.
89 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.