1973 முதல் நடத்தப்பட்டுவரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இதுவரை 12 சீசன்களை கடந்துள்ளது. இதில் 7 முறை ஆஸ்திரேலியா அணியும், 4 முறை இங்கிலாந்து அணியும், 1 முறை நியூசிலாந்து அணியும் கோப்பை வென்று அசத்தியுள்ளன. இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
இந்நிலையில் 2013-ம் ஆண்டுக்கு பிறகு 12 வருடங்கள் கழித்து ஐசிசி உலகக்கோப்பை தொடரானது இந்தியாவிற்கு திரும்பியுள்ளது. இலங்கையும், இந்தியாவும் போட்டியை சேர்ந்து வழங்குகின்றன.
செப்டம்பர் 30 முதல் தொடங்கும் உலகக்கோப்பை தொடர் இலங்கையின் கொழும்புவுடன் சேர்த்து குவஹாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மற்றும் நவி மும்பை ஆகிய நான்கு இந்திய நகரங்களில் நடைபெற உள்ளது.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே மீதமுள்ள நிலையில், பெரிய நிகழ்வுக்கான anthemஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. ’Will Bring It Home’ என தொடங்கும் பாடலுக்கு ஸ்ரேயா கோஷல் குரல் கொடுத்துள்ளார். அவருடைய குரலில் ஒலிக்கும் பாடல் கோப்பை வெல்லாத ஒவ்வொரு அணிக்குமான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகள் போட்டியிடும் இத்தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் ஒருவருக்கொருவர் ஒரு முறை மோதுவார்கள், சிறப்பாக செயல்பட்டு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதை பயன்படுத்தி கோப்பை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.