u19 india team
u19 india team twitter
கிரிக்கெட்

யு19 உலகக்கோப்பை: முதல் போட்டியிலேயே வங்கதேசத்தைப் பந்தாடிய இந்தியா!

Prakash J

ஐசிசி19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கோப்பை 2024 தொடர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி,குரூப் Aயில் பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் Bயில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளும், குரூப் Cயில் ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் குரூப் D-யில் ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் வகையில் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்பின் 4 குரூப்களில் இருந்து தலா 3 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 6 சுற்றுக்கு பின் அரையிறுதி மற்றும் இறுதிப்போடி நடக்கவுள்ளது.

இதையும் படிக்க: மன்னராட்சியை விமர்சித்த இளைஞர்: 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த தாய்லாந்து நீதிமன்றம்!

அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும் வங்கதேசமும் இன்று மோதின. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த வங்கதேசம் அணி, முதலில் இந்திய அணியை பேட் செய்ய பணித்தது.

அதன்படி இந்திய அணி ஆதர்ஷ் சிங் மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோருடன் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆதர்ஷ் சிங் நிலையான ஆட்டத்தைத் தர குல்கர்னியும், அடுத்துவந்த முஷீர் கானும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். பின்னர் ஆதர்ஷ் சிங்குடன் இணைந்த கேப்டன் உதய் சாகரன், அணியை வலுவான ரன் எடுக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றார். அவர்களது இணை, இந்திய அணி 200-க்கும் மேற்பட்ட ரன்களைக் கடக்க உதவியது. ஆதர்ஷ் சிங் 76 ரன்களில் அவுட்டாக, உதய் சாகரன் 64 ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும், அதன்பிறகு களமிறங்கிய வீரர்களான பிரியனஷு மொலியா (23), அரவேலி அவினாஷ் (23), சச்சின் தாஸ் (26*) ஆகியோர் கடைசிக்கட்டத்தில் சிறப்பான ரன்களை எடுத்துக் கொடுக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியின் மரூஃப் மிருதா 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.

பின்னர் கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றம் கண்டது. இடையில் அரிஃபுல் இஸ்லாம் 41 ரன்களும், முகம்மது ஷகீப் ஜேம்ஸ் 54 ரன்களும் எடுத்து அணியை ஓரளவுக்கு சரிவிலிருந்து மீட்டாலும், பின்னர் வந்த வீரர்களால் அணியை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக அந்த அணி 45.5 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் சாமி பாண்டே 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையும் படிக்க: கவர் நிறைய பணம்: எழுதியிருந்த ஒற்றை வார்த்தை.. உரிமையாளரிடம் சேர்க்க புதிய யுக்தியைக் கையாண்ட நபர்!