உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா ட்விட்டர்
கிரிக்கெட்

ஷூவில் இடம்பெற்ற வாசகம்.. ஐசிசி எதிர்ப்புக்கு ஆஸ்திரேலிய வீரர் பதில்!

Prakash J

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி நாளை (டிச.14) தொடங்க உள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் உஸ்மான் கவாஜாவும் இடம்பெற்றுள்ளார்.

இந்தச் சூழலில், பயிற்சியின்போது உஸ்மான் கவாஜா அணிந்திருந்த ஷூவில் ’சுதந்திரம் அனைவருக்குமானது; அனைத்து உயிர்களும் ஒன்றே’ என்ற வசனங்கள் இடம்பெற்று இருந்தன. ஐசிசி விதிமுறைப்படி எந்தவொரு அரசியல் குறித்தான பதிவையும் வீரர்கள் அணிந்திருக்கக்கூடாது. இதையடுத்து, அவர் நாளைய போட்டியில் விளையாட வேண்டும் என்றால், அந்த ஷூவைப் பயன்படுத்தக்கூடாது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கவாஜா பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், “அனைத்து உயிர்களும் சரிசமம் என நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை; அரசியலும் இல்லை. நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், யூதர் என எந்த மதத்தைச் சேர்ந்தவர் உயிர் என்றாலும், அது ஒன்று எனதான் கூறுகிறேன். ஆனால், என்னை தவறு எனக் கூறும் நபர்கள் எவ்வளவு பெரிய தவறைச் செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த நவம்பர் 26ஆம் தேதி, பாகிஸ்தான் கராச்சியில் தேசிய டி20 தொடர் ஒன்றில், லாகூர் ப்ளூஸ் மற்றும் கராச்சி ஒயிட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கராச்சி அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அசம் கான், பாலஸ்தீனத்தின் கொடியை தனது பேட்டில் ஒட்டியிருந்தார்.

இதையடுத்து, ஆடை மற்றும் உபகரண விதிகளை மீறியதற்காக அசம் கானுக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.