Pratika Rawal x
கிரிக்கெட்

’கண்ணீர் வந்தது..’ ஜெய் ஷா தலையீட்டுக்கு பின் பிரதிகாவிற்கு உலகக்கோப்பை பதக்கம்!

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை.. அதனால் உலகக்கோப்பை வென்றதற்கு பிறகு அவருக்கு வெற்றிப்பதக்கம் வழங்கப்பட்டவில்லை..

Rishan Vengai

இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரதிகா ராவலுக்கு பதக்கம் கிடைக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஜெய் ஷா தலையீட்டின் மூலம், ஐசிசி உடன் பேசி, பிரதிகாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. இதனால், அவரது கனவு நனவாகி, மகிழ்ச்சியுடன் பிரதிகா தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்திய மகளிர் அணி, இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதற்குக் காரணம், ஒருநாள் உலகக்கோப்பையை அணி உச்சி முகர்ந்திருப்பதுதான். இதன்மூலம் 47 ஆண்டுகால ஏக்கம் தணிந்திருக்கிறது. எதிர்கால தலைமுறையினருக்கு நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது. ஒட்டுமொத்த மகளிர் அணிக்கும் பாராட்டுகளும், பரிசுத் தொகைகளும் குவிந்து வரும் நிலையில், அவ்வணியில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு வீராங்கனைக்கு மட்டும் பதக்கம் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்தது.

Pratika Rawal

உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தவர் பிரதிகா ராவல். இவர், அணியில் தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கி அணிக்கு பலம் சேர்த்தார். குறிப்பாக, ஏழு லீக் போட்டிகளில் விளையாடிய அவர், 308 ரன்கள் எடுத்தார். இதில் நியூசிலாந்திற்கு எதிராக அவர் எடுத்த 122 ரன்கள் இந்தியாவின் அரையிறுதி கனவை நனவாக்கியது.

Pratika Rawal injury

ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எதிர்பாராதவிதமாக அவருடைய கணுக்காலில் காயம்பட்டதால், தொடரிலிருந்தே விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வெர்மா அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இதனால், உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டிகளின் 15 பேர் கொண்ட குழுவில் பிரதிகா ராவல் பெயர் நீக்கப்பட்டு, ஷஃபாலி வர்மா பெயர் இடம்பெற்றது. இந்த நிலையில், 47 ஆண்டுகால கனவை நனவாக்கி, உலகக்கோப்பையை முத்தமிட்ட இந்திய நாயகிகள் ஒவ்வொருவருக்கும் ஐசிசி சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ஜெய் ஷா தலையீட்டால் வெற்றிப்பதக்கம்..

ஐ.சி.சி விதிமுறைகளின்படி, போட்டியின் முடிவில் அதிகாரப்பூர்வ 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பிரதிகா ராவல் பெயர் இல்லாததால், அவருக்குப் பதக்கம் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில் கடைசி நேரத்தில் இடம்பிடித்த ஷஃபாலி வர்மாவுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது.

ஆனால் பிரதமர் மோடி உடனான இந்திய வீராங்கனைகளின் சந்திப்பில் இடம்பெற்றிருந்த பிரதிகா ராவல் உலகக்கோப்பை வெற்றிப்பதக்கத்தை அணிருந்திருந்தார்.. அதேவேளையில் மற்றொரு வீராங்கனை அமன்ஜோத் பதக்கம் அணியாமல் இருந்தார்.. இதனால் உண்மையில் பிரதிகாவிற்கு பதக்கம் கிடைத்துவிட்டதா அல்லது அமன்ஜோத் தன்னுடைய பதக்கத்தை கொடுத்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டது..

இந்நிலையில் பதக்கம் கிடைத்ததா இல்லையா என்று பேசியிருக்கும் பிரதிகா ராவல், ஐசிசி உடன் பேசி ஜெய் ஷா பதக்கத்தை வரவழைத்திருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்த உரையாடலில் பேசியிருக்கும் அவர், ”பிரதமர் மோடி உடனான சந்திப்பில் அமன்ஜோத் ஏன் பதக்கம் அணியவில்லை என்று தெரியவில்லை.. ஆனால் நான் அணிந்திருக்க பதக்கம் சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவர் கொடுத்தார்.. அப்போது அந்தப்பதக்கத்தை பார்த்தபோது எனக்கு உண்மையில் கண்ணீர் வந்துவிட்டது.. நான் பொதுவாக அழும் ஆள் இல்லை, ஆனால் அந்த தருணம் என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது..

அதேவேளையில் ஜெய் ஷா எனக்காக ஐசிசி இடம் பேசி பதக்கத்தை வரவைப்பதாகவும், பிரதிகா ராவலுக்கும் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் எனவும் எங்கள் மேனேஜரிடம் தெரிவித்திருந்தார். அது உறுதியாகிவிட்டது, தற்போது என்னுடைய பதக்கம் வந்துகொண்டிருக்கிறது..” என பிரதிகா ராவல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்..